கடந்த 21 நாட்களில், COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அருகில், யார் யார் சென்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக நோய் மேலும் பலருக்கு பரவாமல் தடுக்க, தேவையான, துரித பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட செயலிதான் (app) COVIDSafe.
இந்த நோய் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுள் ஒன்றாக இந்த செயலியை Federal அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. தற்போது சுமார் 50லட்சம் ஆஸ்திரேலியர்கள் இந்த செயலியை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
இது சிறப்பாகச்செயல்பட, 40% பொது மக்களாவது இந்த செயலியைத் தரவிறக்கம் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. Apple-இன் App Store-இல் இருந்தோ, Google play இல் இருந்தோ, Federal அரசின் இணையதளத்திலிருந்தோ இந்த செயலியை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். இதைத் தரவிறக்க, பெயர், மொபைல் தொலைபேசி எண், post code மற்றும் வயது (age range) ஆகிய விவரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
உங்கள் மொபைல் தொலைபேசியில் இந்த ‘ COVIDSafe செயலி’ செயல்பட்டுக்கொண்டிருக்கும் ( running) நிலையில், இதே செயலியை தரவிறக்கம் செய்துள்ள மற்றொரு நபர் தனது தொலைபேசியுடன் உங்கள் அருகில் வரும்போது, இரண்டு தொலைபேசியும், Bluetooth என்ற தொழில்நுட்பம் மூலமாக (handshake) கைகுலுக்கிக் கொள்ளும்.
இதன்போது, இருவரது தொலைபேசியிலும், பிரத்தியேகமான code குறியீடு ஒன்று (generate )-உருவாகும். இந்த code ஐ (identity) அறிமுகமாகவைத்து பின் வரும் தகவல்கள் உங்கள் செயலியிலும் மற்றவரது செயலியிலும் encrypted என்ற தரவு மறையாக்க முறையில்பதிவாகும். அதை உங்களால் பகுத்து அறிந்து (decrypt) கொள்ளமுடியாது.
1. எத்தனைபேர் உங்கள் அருகில் வந்திருக்கின்றனர். இருவருக்கிடையே இருந்த இடைவெளி.
2. எப்போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
3. எவ்வளவு நேரம் சந்திப்பு நிகழ்ந்தது.
4. சந்தித்த நபரின் மொபைல் தொலைபேசி make and model.
சந்திப்பு நிகழ்ந்த 21 நாட்களின் பின் encrypted தகவல்கள், செயலியிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுவிடும். Rolling cycle என்ற தொடர் முறையில் ஏனைய சந்திப்புக்கள் தொடர்ந்து பதிவாகும்.
COVID-19 தொற்று ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது உறுதியானால், அவர் யார் யாரைச் சந்தித்திருக்கிறார் என்பதை, அவரிடமோ அல்லது அவரது பெற்றோரிடமோ இருந்து அறிந்துகொள்ள மாநில மற்றும் பிராந்திய நலத்துறை அலுவலர்கள் முயற்சிப்பார்கள்.
அவர் covidsafe செயலியை தனது மொபைல் தொலைபேசியில் தரவிறக்கம் செய்திருந்தால், அவரது அனுமதியுடன் செயலியிலுள்ள encrypted தகவல்களை மிகவும் பாதுகாப்பனதும் நம்பகமானதுமான information storage system என்ற தளத்திற்கு தரவேற்றம் செய்வார்கள்.
Encrypted முறையில் அமைந்த தகவல்கள் decrypt செய்யப்பட்டு, இதன்மூலமாக, நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர் சந்தித்த நபர்களை துரிதமாக அடையாளங்காண முடியும். அந்த நபர்கள், தமக்கும் இந்த நோய் ஏற்பட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ளவும் தேவைப்பட்டால் self isolation என்ற தனிமைப்படுத்திக்கொள்ளவும் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இதனால் அவர்கள் மூலமாக வேறு பலருக்கும் நோய்பரவும் அபாயம் கூடுமானவரை தடுக்கப்படும்.
COVIDSafe செயலி எவ்வாறு செயற்படுகிறது என்பது தொடர்பான source code–ஐ முழுமையாக வெளியிட வேண்டுமென ஆஸ்திரேலியாவின் தொழிநுட்ப வல்லுனர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த பின்னணியில் இத்தகவல்களை இரண்டு வாரங்களுக்கிடையில் வெளியிடுவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தொழிநுட்ப வல்லுநர்கள் சிலர் reverse-engineering எனும் பொறிமுறையைப் பயன்படுத்தி குறித்த செயலி எவ்வாறு செயற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்களில் ஒருவர் Matthew Robbins என்ற software developer
இவரது ஆய்வின்படி COVIDSafe செயலி அரசு குறிப்பிட்டதைப் போலவே இயங்குகிறது என்றும் ஒருவருடன் சந்திப்பு நிகழ்ந்த 21 நாட்களின் பின் encrypted தகவல்கள், செயலியிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுவிடும் என்பதோடு COVIDSafe செயலியை பயன்படுத்துபவரின் அனுமதியுடன் செயலியிலுள்ள தகவல்களை மிகவும் பாதுகாப்பான information storage system என்ற தளத்திற்கு தரவேற்றம் செய்யப்படும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
COVIDSafe செயலியை பலரும் பயன்படுத்திவருகின்றபோதும் இது தனது தொலைபேசியில் தொடர்ந்தும் இயங்கியவண்ணம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் தொலைபேசியிலுள்ள ஏனைய பல செயலிகள் bluetooth-ஐ பயன்படுத்தும்போது COVIDSafe செயலியின் இயக்கம் பாதிக்கப்படலாம் எனவும் சில வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
COVIDSafe செயலியைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளவர்கள் http://covidsafe.gov.au/ என்ற இணையத்தளத்தில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் COVIDSafe செயலியின் செயற்திறனை மேம்படுத்தும் வகையில் பல மாற்றங்களை அரசு தொடர்ந்தும் மேற்கொண்டவண்ணம் உள்ளது.
எதுஎப்படியிருப்பினும் தனிநபர் இரகசியங்கள் முழுமையான அளவில் பாதுகாக்கப்படும் என்ற நிலை எழுந்தால் மாத்திரமே தாம் இந்த செயலியை தரவிறக்கம் செய்யப்போவதாக சில தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப்பின்னணியில் COVID-19 தொற்று நோய்க்கு, தடுப்பு மருந்தோ அல்லது anti viral drug என்ற சிகிச்சைக்கான மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இது போன்ற செயலிகளை பல நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
