கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த தற்காலிக விசாவிலுள்ளவர்களுக்கு உதவியளிப்பதற்கு மாநில அரசு 40 லட்சம் டொலர் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல்கலாச்சார அமைச்சர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
இந்த நாற்பது லட்சம் டொலர் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 20 லட்சம் டொலர்கள் தொழில் விசாக்களுடன் வசித்துவருபவர்களுக்கான அத்தியாவசிய பொருள் உதவி,மருத்துவ உதவி, தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்றவற்றுக்கும், மிகுதி 20 லட்சம் டொலர்கள் ஆதரவு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஊடான உதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேறு பல திட்டங்களின் கீழ் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் இந்த உதவித்திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவியை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களை எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
