நியூ சவுத்வேல்ஸ் மாநில வீதிகளில் Mobile Speed camera warning signs-வேக கண்காணிப்பு கமரா முன்னெச்சரிக்கைப் பலகைகளின் பயன்பாடு நிறுத்தப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
'இந்த இடத்தில் அல்லது சிறிது தூரத்தில் வேக கண்காணிப்பு கமரா உள்ளது' என்ற முன்னெச்சரிக்கை பலகைகள் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவற்றைப் பார்த்தவுடன் வாகனத்தின் வேகத்தை குறைக்கிறார்களே தவிர எப்பொழுதும் சரியான வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற பொறுப்பை உணர்வதில்லை என்றும், இம்முன்னெச்சரிக்கை பலகைகள் வீதி பாதுகாப்பிற்கு எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, குறித்த முன்னெச்சரிக்கைப் பலகைகளை அகற்றுவதற்கு திட்டமிடுவதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் Andrew Constance தெரிவித்துள்ளார்.
NSW மாநிலம் முழுவதுமுள்ள குறித்த Mobile Speed camera warning பலகைகளின் பயன்பாடு அடுத்த 12 மாதங்களில் கட்டம் கட்டமாக நீக்கப்படவுள்ளதாகவும், வேகக்கட்டுப்பாட்டை மீறிச் செல்பவர்கள் எந்த இடத்திலும் அகப்படக்கூடும் என்பதால் எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையுடன் செல்வது அவசியமென்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன்மூலம் NSW மாநிலத்தில் ஆண்டொன்றுக்கு 600 விபத்துக்களைத் தவிர்க்கலாம் எனவும் இதனூடாக 34-43 உயிரிழப்புக்கள் தவிர்க்கப்படக்கூடும் எனவும் Monash University Accident Research Centre நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
