பண்டிகைக்கால வீதி ஒழுங்கு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்ற நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை குடும்பப்பெண் ஒருவரை மறித்து சோதனை செய்தபோது அவர் இழைத்த குற்றங்களுக்காக 34 demerit புள்ளிகளை இழந்துள்ளார்.
அத்துடன் அவருக்கு 1793 டொலர்கள் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை Blue mountains பிரதேசத்தில் வீதிப்பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலீஸாரின் மோட்டார் சைக்கிள் அணியினர், வளைவொன்றில் பெண்ணொருவர் கைத்தொலைபேசி பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுவதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக சென்று வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் கையும் களவுமாக அகப்பட்டுள்ளார்.
வாகனத்தை மேலதிகமாக சோதனை செய்தபோது, அந்த வாகனத்திலிருந்த அவரது மூன்று குழந்தைகள் உட்பட இன்னொருவர் எவருமே ஆசனப்பட்டி அணியவில்லை என்பதை பொலீஸார் கண்டுபிடித்தனர்.
ஜனவரி 1 வரை demerit அபராதப்புள்ளிகள் இருமடங்கு என்பதால் எல்லாவற்றுக்கும் சேர்ந்து 34 demerit புள்ளிகளும் 1793 டொலர் தண்டப்பணமும் அறவிடப்பட்டது.
இதேவேளை புதுவருட தினம் வரைக்கும் தொடரப்போகும் தீவிர வீதிப்பாதுகாப்பு நடவடிக்கையில் பொலீஸார் கூடுதல் கவனத்தோடு செயற்பாடுவர் என்று பொலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
