ஜேர்மனியிலிருந்து ஜப்பான் வழியாக சிட்னி வந்திறங்கிய தாயும் மகனும் தங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்டுபடுத்தாமல் மெல்பேர்னுக்கு பயணித்திருந்த நிலையில், இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் சோதனையில் அவர்களுக்கு தொற்று எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனை முடிவின் காரணமாக இவர்களின் ஊடாக தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 179 பேர் ஆறுதலடைந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு இந்த இருவருடனும் பயணம் செய்த பயணிகள், விமானப்பணியாளர்கள் உட்பட 179 பேர் இந்த சம்பவத்தினால் தனிமைப்படுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்டுத்தப்படவேண்டும் என்ற கட்டாய நடைமுறை பின்பற்றப்படுகின்றபோது, இவர்கள் இருவரும் எவ்வாறு மெல்பேர்னுக்குள் நுழைந்தார்கள் என்பது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி - குறிப்பிட்ட தாயும் மகனும் ஜேர்மனியிலிருந்து ஜப்பான் வழியாக சிட்னி வந்தடைந்துள்ளார்கள். இவர்கள் ஆஸ்திரேலிய - ஜேர்மன் இரட்டைக்குடியுரிமை உடையவர்கள் என்றும் தமக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விதிவிலக்கு உள்ளதாக அவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தவேண்டியவர்கள் அல்லர் என்று கருதிய விமான நிலைய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர், இருவரையும் மெல்பேர்னுக்கு செல்லவேண்டிய விமானசேவைகள் பகுதிக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். அங்கிருந்து மெல்பேர்னுக்கு வந்த தாயும் மகனும் ஹோட்டலுக்கு எவ்வாறு போவது என்று தெரியாமல் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததை எதேச்சையாக கேள்விப்பட்ட மெல்பேர்ன் விமானநிலைய சுகாதார சேவைகள் அதிகாரி ஒருவர்தான் கடைசியில் அவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தலுக்கு அவர்களை அனுப்பிவைப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் - என தெரியவந்திருக்கிறது.
Share
