சிட்னியில் உள்ள ராயல் பிரின்ஸ் ஆல்ஃபிரட் மருத்துவமனையில் முன்னுரிமை தரப்படாத பகுதியிலிருந்து வந்து கடந்த வாரம் வெள்ளிகிழமை தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 60 பேரை கண்டறிய NSW காவல்துறை முயற்சித்து வருகிறது.
சுகாதார ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசி முன்பதிவுகளை இப்படியானவர்கள் முறைகேடாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர். சமூக ஊடக செயலியான WeChat இல் இப்படியான முன்னுரிமை தரும் தனிப்பட்ட இணைப்பு (private online link) பகிரப்பட்டது என்றும், ஆனால் இது முறைகேடு என்று தெரியாமலேயே பலர் இந்த மோசடியில் விழுந்து விட்டனர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
NSW Health online vaccination booking service வழங்கிய முன்னுரிமை முன்பதிவுகளுக்கு ஒருவர் தகுதியற்றவராக இருந்தபோதிலும் அவர் முன்பதிவு கட்டணத்தை செலுத்தி பதிவு செய்யலாம் என்ற வகையில் மோசடி நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னுரிமை தடுப்பூசி பெற அவர்களில் பலர் 300 டாலர் செலுத்தியதாக போலீசார் கூறியுள்ளனர்.
கோவிட் -19 தடுப்பூசிகளும் சரி அல்லது அது தொடர்பான மருத்துவமும் ஆஸ்திரேலியாவில் வாழும் அனைவருக்கும் – அவர்கள் விசா இல்லாமல் வாழும் நபராக இருந்தாலும் சரி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்று அதிகம் பரவுவதாக அடையாளம் காணப்பட்ட உள்ளூராட்சி பகுதிகளில் (LGA) வாழும் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சில அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை தடுப்பூசி நியமனங்களை வழங்குவதாக NSW மாநில அரசு அறிவித்த பின்னணியில் இந்த முறைகேடு நடந்துள்ளது. Bayside, Blacktown, Burwood, Campbelltown, Canterbury-Bankstown, Cumberland, Fairfield, Georges River, Liverpool, Parramatta, Strathfield, மற்றும் Penrithயின் சில பகுதிகள் தொற்று அதிகம் பரவுவதாக அடையாளம் காணப்பட்ட உள்ளூராட்சி பகுதிகளாகும்.
சுகாதாரம், வயது முதிர்ந்தவர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரியும் நபர்கள் தடுப்பூசியை முன்னிரிமை அடிப்படியில் உடனடியாக பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
