சிட்னி துறைமுகப் பாலத்தின் மீது தற்போது இரண்டு கொடிகளை ஏற்றும் வசதியே தற்போது உள்ளது. இந்த இரண்டு கொடிகளில் ஒன்று மாநிலக் கொடியும், மற்றொன்று பெடரல் அரசின் கொடி அல்லது நாட்டின் தேசியக் கொடியாகும். எனவே மூன்றாவது கொடியொன்றை பறக்கவிட பாலத்தில் வசதி இல்லை என்று முந்தைய NSW அரசுகள் கூறிவந்தன. ஆனால் சிட்னி துறைமுகப் பாலத்தின் மீது உச்சியில் மூன்றாவது கொடிக் கம்பத்தையும் நிறுவுவதற்கான வழியைக் கண்டறியுமாறு தாம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருப்பதாக தற்போதைய NSW பிரீமியர் Dominic Perrottet கூறினார்.
முக்கிய தினங்களில் பூர்வீக குடிமக்களின் கொடியை மாநில அரசு சிட்னி துறைமுகப் பாலத்தின் மீது பறக்கவிடுவதுண்டு. அப்படி ஆண்டுக்கு 19 நாட்கள் சிட்னி துறைமுகப் பாலத்தின் மீது பூர்வீக குடிமக்களின் கொடி பறக்க விடப்படுவதுண்டு. இந்த பின்னணியில் பூர்வீக குடிமக்களின் கொடியை சிட்னி துறைமுகப் பாலத்தின் மீது நிரந்தரமாக பறக்க விடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதற்கான கையெழுத்து இயக்கமும் துவங்கப்பட்டத்து. இதில் சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர் கையெழுத்திட்டனர்.
சிட்னி துறைமுகப் பாலத்தின் மீது கொடிக் கம்பம் நிறுவும் பணிக்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது என்றும், ஆனால் ஆறு முதல் 12 மாதங்களுக்குள் இந்த பணியை செய்து முடிக்க தாம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் பிரீமியர் Dominic Perrottet கூறினார். 1920களில் துறைமுகப் பாலத்தை நம்மால் கட்ட முடிந்தது என்றால், 2022 இல் பாலத்தின் மீது மேலும் ஒரு கொடிக் கம்பத்தை வைக்க இயலாதா என்று பிரீமியர் Dominic Perrottet கேள்வி எழுப்பினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
