SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது.

பிரதமர் மால்கம் டர்ன்புல் அவர்களது இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

Australian Prime Minister Malcolm Turnbull arrives in India
Australian Prime Minister Malcolm Turnbull arrives in India Source: AAP

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

இந்திய மாணவர்களுக்கு, ஆஸ்திரேலியா ஒரு பாதுகாப்பான கல்வித் தளமாக விளங்குகிறது என்று, பிரதமர் மற்றும் 120 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா சென்றிருக்கும் கல்வி அமைச்சர் சைமன் பர்மிங்ஹாம் வலியுறுத்தியுள்ளார்.

 

மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவரும் இவ்வேளையில், ஆஸ்திரேலிய பிரதமரும், கல்வி அமைச்சரும் இந்திய மாணவர்களை ஆஸ்திரேலியாவிற்கு வந்து மேற்படிப்பைத் தொடருவதற்கு ஊக்குவிக்கிறார்கள். 

தொழில்முறை மற்றும் உயர் கல்வியை மேற்கொள்ள, இந்திய மாணவர்கள் விரும்பும் இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியா தற்போது திகழ்கிறது.

ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை, கடந்த ஜனவரி மாதம் நாற்பத்தைந்தாயிரத்தைக் (45,000) கடந்திருப்பதாக ஃபயர்ஃபக்ஸ் ஊடகம் செய்த ஆய்வு கணித்துள்ளது.  ஆஸ்திரேலியாவிற்குக் கல்வி கற்க வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 2008ம் ஆண்டுக்கும் 2010ம் இடைப்பட்ட காலப்பகுதியில் அரை மடங்காகக் குறைந்தது.  இந்திய மாணவர்கள் மேல் இனப்பாகுபாடு தொடர்பான தாக்குதல்கள் சில இந்தக் காலப் பகுதியில் நடந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் இங்கு வரும் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்திய மாணவர்கள் மீது இன தாக்குதல்கள் இனி ஒரு பிரச்சினையாக இருக்காது என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் ஆஸ்திரேலிய உறவுக்குப் பொறுப்பாகவிருக்கும் ஜெய்தீப் மசும்தர் குறிப்பிட்டார்.  ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் மேலும் சொன்னார். 

Brexit மற்றும் அமெரிக்காவில் நிகழ்ந்த இந்தியர்களுக்கு எதிரான சமீபத்திய வன்முறை சம்பவம் என்பன இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் மேற்படிப்பை மேற்கொள்வதை விட ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளலாம் என்ற சிந்தனையை இந்திய மாணவர்களிடையே அதிகரிக்கச்செய்துள்ளது.

“78,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பை மேற்கொள்ள கடந்த ஆண்டு வந்திருந்தார்கள். இரண்டு பில்லியன் டொலர் பொருளாதார ஈவுத்தொகையை அவர்கள் உருவாக்கியிருந்தார்கள்.  இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கத் தேர்வு செய்திருக்கும் இரண்டாவது மிகப் பிரபலமான இடமாக ஆஸ்திரேலியா இருப்பது எமக்குப் பெருமை தருகிறது" என்று செனட்டர் பர்மிங்ஹாம் கூறினார்.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now