சிட்னி மேற்கில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பிள்ளைகள் மரணமடையக் காரணமாகவிருந்த ஓட்டுனருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பரமட்டா அருகே Oatlands Golf Club பக்கமாக நடைபாதையில் வந்துகொண்டிருந்தவர்கள் மீது 4WD வாகனமொன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளும் அவர்களது உறவினரான மற்றுமொரு சிறுமியும் கொல்லப்பட்ட அதேநேரம் மூவர் காயமடைந்தனர்.
Antony(13), Angelina(12), Sienna Abdallah(8) மற்றும் Veronique Sakr(11) ஆகியோரே இவ்விபத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
Samuel William Davidson(30) என்ற நபர் மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் அதிவேகமாக வாகனமோட்டி வந்து கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
விபத்து இடம்பெற்றபோது இந்நபர் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் 3 மடங்கு அதிக போதையில் இருந்ததுடன் கொக்கெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் பயன்படுத்தியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இவ்விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பு ஈடுசெய்யப்படமுடியாத ஒன்று எனத் தெரிவித்த நீதிபதி James Bennett 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அதேநேரம் குறித்த நபர் 2041ம் ஆண்டு பரோலில் வெளியே வருவதற்கு விண்ணப்பிக்க முடியும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
