SKIP TO MAIN CONTENT

இணையவழி வாங்கும் பொருட்களுக்கு 7 டொலர் மேலதிக வரி !!

குறைந்த மதிப்புடைய பொருட்களை இறக்குமதி செய்யும்போது நீங்கள் ஒரு புதிய வரி கட்ட வேண்டி வரலாம். அதற்கான சட்ட முன்வடிவை அரசு தற்போது விவாதித்து வருவதாக அறிவித்துள்ளது.

A man posting a parcel at an Australia Post box
Close to 40 million goods valued under $1000 were imported into Australia in 2016-17. (AAP) Source: AAP

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: AAP, SBS



Skip to article content

வெளிநாட்டிலிருந்து ஆடைகள், புத்தகங்கள் அல்லது மருத்துவ சுகாதாரப் பொருட்களை நீங்கள் வாங்கும் போது GST எனப்படும் வரிக்கும் மேலாக, ஒரு புதிய வரியும் கட்ட வேண்டி இருக்கலாம்.

அரசு அறிவிக்கவிருக்கும் புதிய நிதிநிலை அறிக்கையில் நிறுவனங்களுக்கான வரியைக் குறைக்கும் அதேவேளை, நலன்புரி செயற்பாடுகளுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறது என்று கூறப்படும் நிலையில், இப்படி ஒரு வரியை மக்களிடையே அறிமுகப்படுத்துவது நியாயமா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

$1,000ற்கும் குறைவான பொருட்கள் இறக்குமதி செய்யும் போது கட்ட வேண்டிய இந்த மேலதிக வரி, $2 முதல் $7 வரை என்று சொல்லப்படுகிறது.

"ஆஸ்திரேலியர்கள் ஏற்கனவே அதிக வரி கட்டுகிறோம்" என்று செனட்டர் David Leyonhjelm செவ்வாயன்று கன்பராவில்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  "எங்கள் பைகளில், எங்கள் சொந்தப் பணம் எதுவுமே தங்காது என்ற எண்ணம் என்னை விரக்திக்குள்ளாக்குகிறது" என்று அவர் மேலும் சொன்னார்.

பொருட்கள் நாட்டிற்குள் எடுத்து வரப்படும் போது, பாதுகாப்பிற்காக அவற்றைப் பரிசோதிக்க அதிக செலவாகிறது என்றும் அதனை ஈடு செய்ய இந்தப் புதிய வரியை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

"உயர் மதிப்பு சரக்குகளின் இறக்குமதியாளர்கள், எல்லைப் பாதுகாப்பு சேவைக்கான செலவைக் கட்டுகிறார்கள்" என்று அமைச்சு தனது வாதத்தை நியாயப்படுத்துகிறது.

2016-17ம் ஆண்டு காலப் பகுதியில், ஆஸ்திரேலியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட குறைந்த ($1,000ற்கும் குறைவான) பெறுமதியான பொருட்களின் மொத்த மதிப்பு 40 மில்லியன் டொலர்கள்.  இது முந்தைய ஆண்டைவிட 22 சதவீதம் அதிகமாகும்.  அடுத்த நான்கு ஆண்டுகளில் அது 31 சதவீதமாக உயரும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

மாறாக, 2016-17ம் ஆண்டு காலப் பகுதியில், $1000ற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களின் மொத்த மதிப்பு 3.7 மில்லியன் டொலர்கள்.  இந்தப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது அவற்றிற்கு வரி கட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டிலிருந்து இப்படியான வரியை அறிமுகப்படுத்த அரசு எத்தனித்துள்ளது.

இந்த வரியின் பெரும் பங்கை, விநியோகம் செய்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அது நுகர்வோர் மீது திணிக்கப்படும் என்று அவதானிகள் சொல்கிறார்கள்.

இறக்குமதியாளர்களுக்கான வரி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று இது குறித்த அறிக்கை கூறுகிறது.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now