புதுவருடத்திருவிழாவுக்காக லட்சக்கணக்கில் மக்கள் கூடிய சிட்னியில் - கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது - பாரியளவில் குழப்பங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ள சிட்னி பொலீஸார் ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களில் புதுவருடத்துக்கு முதல்நாள் மாலை நான்கு மணி முதல் விடிகாலை மூன்று மணிவரையான காலப்பகுதியில் 34 பேர் கைது செய்யப்பட்டு 43 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன என்றும் அரைவாசிக்கு மேற்பட்டவை போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளனர்.
புதுவருட தினத்தன்று மாத்திரம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 2500 அவசர சேவை அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவற்றில் முக்கியமாக இருவர் பட்டாசுகளினால் எரிகாயங்களுக்குள்ளான சம்பவமும் வாகன விபத்தொன்று ஒருவரை காவுகொண்டமையும் குறிப்பிடத்தக்கவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் புதுவருட இரவன்று இடம்பெறாதபோதும் ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களில் 59 பேர் கைது செய்யப்பட்டதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். அன்றிரவு 1089 அவசர அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறிஸ்பனில் பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய 60 பேர் கைதுசெய்யப்பட்டு 60 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டபோதும் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
