பிறக்கவிருக்கும் குழந்தை ஆபத்தான நோய்களால் தாக்கப்படுவதைத் தடுக்க, கருவிலேயே அதைத் திருத்தம் செய்யும் முறையை ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பில் தந்தை தாய் ஆகியோரோடு சேர்த்து மூன்றாவது நபர் ஒருவரின் மரபணு பங்களிப்பும் சேர்கின்ற முறையே இதுவாகும்.
அதாவது நமது உடல் செல்களில் மைட்டோ காண்ட்ரியாக்கள் உள்ளன. ஆனால் சில பெண்களுக்கு அந்த மைட்டோ காண்ட்ரியாக்களில் மரபணு குறைபாடுகள் உள்ளன. அதைப் போக்க நல்ல உடல் நலத்துடன் கூடிய மற்றொரு பெண்ணின் மைட்டோ காண்ட்ரியாவை, கருவுற்ற பெண்ணின் கருமுட்டையுடன் இணைக்கின்றனர். இதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் மரபணு நோயில் இருந்து காக்கப்படுகின்றன.
2 தாய், ஒரு தந்தையின் மரபணுக்களுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் இப்புதியமுறைக்கு உலகிலேயே முதன்முறையாக, பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிலும் இதற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட வேண்டுமென்ற குரல்கள் வலுத்துவருகின்றன.
மரபியல்ரீதியாக உள்ள குறைகளை நீக்கி ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை இந்த முறை சாத்தியப்படுத்தும் என இதற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் தெரிவித்தாலும், இந்தத் தொழில்நுட்பத்தை அனுமதித்தால் தன்னுடைய பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோர் திட்டமிட்டு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, குழந்தைப்பேறு மாறிவிடும் என மற்றொரு சாரார் குற்றம்சாட்டியுள்ளனர்.
