நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பெற்றோல் விலையேற்றம் பயனாளர்களை தொடர்ந்தும் பயமுறுத்திவரும் நிலையில், அடுத்துவரும் நாட்களில் ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 2 டொலர்கள் செலுத்தவேண்டி நேரிடலாம் என அஞ்சப்படுகிறது.
சிட்னியில் நேற்றைய தினம் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை $1.75 சதத்தினை எட்டியிருந்ததுடன் அடிலெய்டில் சராசரியாக $1.67 சதத்திற்கு பெற்றோல் விற்கப்படுகிறது. அதேநேரம் மெல்பேர்னில் கடந்த மாதம் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை $1.67 சதத்தினை எட்டியதன் மூலம் பத்து வருடங்களுக்கு பின்னர் மீண்டுமொரு தடவை இந்த உச்ச விலையினை பெற்றோல் எட்டியிருந்தது.
இதேவேளை மேற்கு ஆஸ்திரேலியாவின் புறநகர்பகுதிகள் சிலவற்றில் ஒரு லீட்டர் பெற்றோல் $1.80 சதங்களுக்கு விற்பனையாவதாகவும் மிகவும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் $2.05 சதங்கள் தொடக்கம் $2.99 சதங்கள் வரை விற்கப்படுவதாகவும் ஏபிஸி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலிய டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி ஏற்படுமாக இருந்தால் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 2 டொலர்களாவதைத் தடுக்கமுடியாதென பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து எரிபொருட்களுக்கான வரியை பிரதமர் Scott Morrison குறைக்க வேண்டுமென்ற குரல்கள் வலுத்துவருகின்றன.
