அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, நவுறு தடுப்பு முகாமிலுள்ள ஒரு தொகுதி அகதிகள் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான், மியன்மார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 22 அகதிகள், நவுறுவிலிருந்து Fiji வழியாக Los Angeles-க்கு செல்லவுள்ள நிலையில், இப்பயணம் குறித்த தகவல்களை இருநாட்டு அரசுக்களும் இரகசியமாகப் பேணுகின்றன.
இவ்வாறு அமெரிக்கா செல்லும் அகதிகள், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் அதேநேரம், ஒரு வருடத்தின் பின் அவர்கள் அங்கு நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்குத் தகுதி பெறுவர். பின் 5 வருடங்கள் கழித்து அமெரிக்க குடியுரிமை பெறமுடியும்.
இருநாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், இதுவரை மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாமிலிருந்து 100 அகதிகள் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பின்னணியில், அடுத்த தொகுதியினர் இன்று புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
