தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் நேற்று மெல்பேர்னில் காலமானார்.
யாழ்ப்பாணம் கரவெட்டியில் 1948ம் ஆண்டு நவம்பர் 17ம் திகதி பிறந்த பொன்.சத்தியநாதன் அவர்கள், ஒரு மருத்துவராக, தாயகத்திலும் பின்பு புலம்பெயர்வாழ்விலும் அரும்பணியாற்றியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஈழவிடுதலைப் போராட்டம் மீதும் தமிழ் மீதும் ஆழ்ந்த பற்றுக்கொண்ட இவர், இதற்கென பல்வேறுவழிகளில் பங்காற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களிடையே திருவள்ளுவரையும் திருக்குறளையும் பரவச்செய்வதற்காக, தமது சொந்தச்செலவில் திருவள்ளுவர் சிலைகளை வடிவமைத்து மக்களின் இல்லங்களில் அவை இடம்பெறுவதற்கு திரு.சத்தியநாதன் அவர்கள் வழிவகுத்திருந்தார்.
மேலும், தாயகத்திலிருந்து பல இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி வாய்ப்பு பெறுவதற்கும் ஆக்கபூர்வமாக ஆதரவு வழங்கிய இவர், தமிழ் உலகம் என்ற இருமொழிப்பத்திரிகையை சிறிதுகாலம் வெளியிட்டவர்.
தமிழ்ப் பணிகளுக்கும் தாயகத்திற்கான உதவிகளுக்கும், தனது சொந்த உழைப்பில் கிடைத்த வருமானத்தையே செலவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் அவ்வமைப்பின் தலைவராகவும் இருந்து, ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.
மெல்பேர்னில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதிலும், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதிலும் முன்னோடியாக விளங்கினார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள், தமிழின உணர்வாளர் பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
கணினி வழி தமிழை உருவாக்க வேண்டும் என்ற உணர்வால் கணினித் துறையில் சிறப்புப் பட்டம் பெற்று தமிழைப் பேச்சு வடிவத்திலிருந்து எழுத்து வடிவத்தில் பதிக்கும் மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான மொழியியல் ஆய்வுக்காக சிங்களம், சமஸ்கிருதம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றவர்.
2012ம் ஆண்டு ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பொன். சத்தியநாதன் அவர்கள் dementia எனப்படும் மறதி நோய்க்கு ஆளானநிலையில், தனது 69வது வயதில் நேற்றிரவு காலமானார்.