வாகனமோட்டும்போதும் bluetooth மற்றும் speaker வழியாகவும்கூட கைத்தொலைபேசியை பயன்படுத்துவதற்கு L Plate மற்றும் P Plate வாகன ஓட்டுனர்களுக்கு தடை விதிக்கும் கடுமையான சட்டம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் கன்பராவில் அறிமுகமாகிறது.
வாகனமோட்டும்போதும் இடம்பெறும் விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறியும் சர்வதேச தரவுகளை கருத்தில்கொண்டு இந்த தடையுத்தரவு கொண்டுவரப்படுவதாக தலைநகரின் வீதிப்பாதுகாப்பு அமைச்சர் Shane Rattenbury தெரிவித்துள்ளார்.
இளைஞர் - யுவதிகள் கைத்தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனமோட்டுவது அதிகரித்துவிட்டது என்றும் வாகனமோட்டிக்கொண்டிருக்கும்போது குறுந்தகவல் அனுப்புவது - சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது ஆகியவை மிகவும் அதிகரித்துவிட்டது என்றும் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தக்கடுமையான சட்டம் தேவையானது என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய சட்டத்தின் கீழ் Bluetooth hands-free/ Speaker உட்பட எதனூடாகவும் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி அழைப்புக்களை மேற்கொள்வது தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கைத்தொலைபேசியை பயன்படுத்தும் வாகன ஓட்டுனர்களிடம் அறவிடப்படவுள்ள தண்டப்பணம் பற்றிய விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறுந்தகவல் அனுப்புகிறவர்கள் மற்றும் சமூகவலைத்தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு 589 டொலர் அபராதமும் நான்கு demerit புள்ளிகளும் தண்டனையாக அறவிடப்படும் என்றும் தொலைபேசியை பேசுவதற்கு பயன்படுத்துபவர்களுக்கு 480 டொலர்கள் அபராதமும் மூன்று demerit புள்ளிகளும் அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
