புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக மனம் வருந்துகிறார் பிரதமர்!

நவுறு மற்றும் மனுஸ் தீவு தடுப்பு முகாம்களிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை நினைத்து தான் மனம் வருந்துவதாக பிரதமர் மால்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனாலேயே அவர் அரசின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்யப்போகிறார் என அர்த்தமில்லை.
அவ்வாறு எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை மாற்றினால் பல ஆயிரம் பேர் கடலில் மூழ்கி உயிரிழக்க நேரிடும் என ஏபிஸி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்ற தவறான நம்பிக்கை வழங்குவதை அகதிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் நிறுத்த வேண்டுமெனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இப்படியான தவறான நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளும் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயல்வதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை நவுறுவில் கடந்த வாரம் ஈரானியப் புகலிடக்கோரிக்கையார் ஒருவர் தற்கொலை செய்திருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை தனக்குத்தானே தீமூட்டிக் கொண்ட சோமாலியப் பெண் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது ஒரு புறமிருக்க மனுஸ் தீவு தடுப்பு முகாமை மூடிவிடத் தீர்மானித்திருக்கும் பப்புவா நியூ கினி அரசு அங்குள்ள 900 புகலிடக்கோரிக்கையாளர்களையும் என்ன செய்வது என்பது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசுடன் தொடர்ந்தும் பேச்சு நடத்தி வருகிறது.

ஆனால் அங்குள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது பிரச்சினை அல்லவென்றும் அவர்களைப் பொறுப்பேற்ற பப்புவா நியூ கினி அரசே அவர்களை என்ன செய்வது எனத் தீர்மானிக்க வேண்டுமென ஆஸ்திரேலியாவின் Attorney General ஜோர்ஜ் பிரண்டிஸ் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
