மானஸ் மற்றும் நவ்ரு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டவர்களுக்கு நாளை முதல் கொடுப்பனவுகள் அல்லது நிதி உதவி நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும் அரசு உதவியுடன் அவர்கள் சமூகத்தில் வாழும் நடை முறை கைவிடப்படுவதால் அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறும் தயாரிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
"final departure Bridging E Visa" என்று அரசு கூறும் விசா வைத்திருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என்றும், இவர்கள் சுமார் நூறுபேர் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இனிமேலும் வரி செலுத்துவோர் இவர்களின் செலவுகளை ஏற்க முடியாது என்று Centrelink ஐ நிர்வகிக்கும் Human Services துறையின் அமைச்சர் Alan Tudge கூறினார்.
அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகளும், அகதிகளுக்காக குரல் தரும் அமைப்புகளும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
அரசின் இந்த அறிவிப்பு நாளை சுமார் நூறுபேரை பாதிக்கும் என்றும் , மொத்தத்தில் சுமார் நானூறுபேரை பாதிக்கும் என்றும் The Human Rights Law Centre and Asylum Seeker Resource Centre கூறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட இவர்களில் பலர் வேலை செய்து பாதுகாப்பாக வாழும் நிலையில் உள்ளவர்கள் என்றும், இவர்களை அரசு திருப்பி அனுப்புவது கண்டிக்கத்தக்க செயல் என்றும் Asylum Seeker Resource Centre இன் Natasha Blucher கூறினார்.
