மனுஸ் தடுப்பு முகாமிலிருந்த Hamid Khazaei என்ற 24 வயது புகலிடக்கோரிக்கையாளருக்கு, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கியிருந்தால் அவரது மரணம் தடுக்கப்பட்டிருக்கும் என மரண விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2014ம் ஆண்டு ஈரான் பின்னணி கொண்ட Hamid Khazaei-க்கு காலில் தொற்று ஏற்பட்டிருந்தநிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக பிரிஸ்பேர்னிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்திருந்தார்.
இந்தப்பின்னணியில் Hamid Khazaei-இன் நோய்நிலை என்ன என்பதை மனுஸ் மருத்துவ அதிகாரிகள் சரியாக கண்டறிந்திருக்காத அதேநேரம் தடுப்பு முகாமில் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து மரணவிசாரணை அதிகாரி Terry Ryan, ஆரம்பத்திலேலேயே சரியான சிகிச்சை வழங்கியிருந்தால் குறித்த புகலிடக்கோரிக்கையாளரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இனிமேல் இப்படியான மரணங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஆஸ்திரேலிய தரத்தில் அமைந்த மருத்துவ உதவிகள் கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ளவர்களுக்கு கிடைப்பதற்கு அரசு வழிசெய்ய வேண்டுமென Terry Ryan வலியுறுத்தியுள்ளார்.
