2005 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முதலாவது நபர் 13 வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து விடுதலையாகி ஆஸ்திரேலியா வந்து சேர்ந்துள்ளார்.
தனது 13 வருட சிறைத்தண்டனையை நிறைவு செய்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த Renae Lawrence மீது ஆஸ்திரேலியாவிலும் வேறு குற்றங்களுக்காக பிடியாணை நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவிலிருந்து பிரமுகர்கள் பயன்படுத்தும் விமானநிலைய பாதைவழியாக ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றி அனுப்பப்பட்ட Renae Lawrence இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியளவில் பிறிஸ்பன் விமானநிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து அவரது சொந்த ஊரான Newcastle பிரதேசத்துக்கு இன்னொரு விமானத்தில் செல்கிறார்.
பிறிஸ்பன் விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவரை ஊடகவியலாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அவரை இந்தோனேஷயாவிலிருந்து அழைத்து வந்த அவரது தாயார் "நாங்கள் யாருடனும் பேசுவதற்கு தயாரில்லை. எங்களை விட்டுவிடுங்கள்" - என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்.
இந்தோனேஷியாவில் சிறைத்தண்டனை பெற்றிருந்தாலும் ஆஸ்திரேலியாவில் செய்த குற்றத்துக்கு விசாரிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்று அண்மையில் Renae Lawrence திரும்பி வருவது தொடர்பாக கேட்டபோது உள்துறை அமைச்சர் Petter Dutton கருத்து தெரிவித்திருந்தார். ஒரு குற்றத்துக்கு அனுபவித்த தண்டனை மறு குற்றத்துக்கு அனுபவிக்கவேண்டிய தண்டனைக்கு சலுகையாகிவிடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பாலி - 9 எனப்படும் இந்தோனேஷியாவில் போதைப்பொருளுடன் கைதான ஒன்பது ஆஸ்திரேலியர்களில் தமிழரான மயூரன் சுகுமாரன், அன்றூ சான் ஆகிய இருவர் மரணதண்டனை மூலம் கொல்லப்பட்டதும் ஒருவர் சிறையில் புற்றுநோய் வந்து இறந்தமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ஐவரில் நால்வர் ஜனாபதியிடம் தங்களது தண்டனையை குறைக்கக்கோரி கருணை மனு சமர்ப்பித்துள்ளனர்.
