தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு பட்டியலிலிருந்து, நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விடுதலை புலிகள் கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த தாக்குதல்களிலும் ஈடுபடவில்லையென்றும்,அவர்கள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் சமர்பிக்கவில்லை என்றும், அந்த அமைப்பின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடுவதற்கு பயன்படுத்திய முறைமை குறித்தே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், கடந்த 2011- 2015ம் ஆண்டு காலப் பகுதி வரையிலான மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், 2015 - 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் அடிப்படையில், புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே பட்டியலிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் நீதிமன்றின் தீர்ப்பு உன்னிப்பாக ஆராயப்பட்டு, தேவை ஏற்படின் தடை உத்தரவு குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
