ஆஸ்திரேலியாவில் வாகனமோட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களைக் கண்காணிக்கவென பாதசாரிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள பாலங்களின் மேல் பொலீஸார் மறைந்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன ஓட்டுனர்கள் கைத்தொலைபேசியை உபயோகிப்பது பெருகிவரும்நிலையில், அதனை கடுமையான குற்றமாக அறிவித்து, அந்தக்குற்றத்துக்குரிய அபராத தொகையை அதிகரித்துள்ளபோதும் வாகன ஓட்டுனர்களின் சட்டவிரோதமான கைத்தொலைபேசி பாவனை குறையவில்லை என்று பொலீஸார் தெரிவித்துவருகிறார்கள்.
இதன்காரணமாக, நாட்டின் பல பாகங்களிலும் பொலீஸார் அதிரடியாக பல சோதனைகளை மேற்கொண்டு வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்துகின்றவர்களுக்கு கடுமையான அபராதங்களை விதித்துவருகின்றனர்.
இந்த சோதனை வழிமுறைகளின் புதிய வடிவமாக பொலீஸார் வீதிகளுக்கு மேலாக அமைக்கப்படும் பாதசாரிக் கடவைகளின்மீது ஏறிநின்று வாகன ஓட்டுனர்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதை உறுதிசெய்யும் வகையிலான புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் பரவிவருகின்றன. குறிப்பாக சிட்னி King Georges Road,Beverly Hills பகுதியிலுள்ள பாதசாரிக்கடவையில் நிற்கும் பொலிஸ் உத்தியோகத்தரின் புகைப்படத்தை நபர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
