NSW மாநிலத்தில் தாம் திட்டமிட்டிருந்ததைவிட முன்னதாகவே பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை நடைமுறைப்படுத்தப்போவதாக Woolworths நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதிக்குப் பதிலாக, அதாவது பத்து நாட்களுக்கு முன்பாக, ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதலே பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை நடைமுறைப்படுத்தப் போவதாக Woolworths நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் NSW மாநிலத்திலுள்ள Marayong, Greenway Village, Dural மற்றும் Mullumbimby இடங்களிலுள்ள 12 Woolworths கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படுவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Woolworths நிறுவனத்தின் சூப்பர்மார்க்கெட் எனப்படும் பலசரக்கு கடைகள் மட்டுமின்றி, BWS, Metro மற்றும் பெட்ரோல் மையங்கள் என்ற தனது நிறுவனத்தால் நடத்தப்படும் பிற கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படாது என்று Woolworths நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒருமுறைக்கும் அதிகமாக பயன்படுத்தக்கூடிய reusable bag - 15 சென்டுக்கு விற்கப்படும் என்றும், பிற பை (canvas bag) 99 சென்றுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் Woolworths அறிவித்துள்ளது.
இதே வேளையில் தாம் முன்பே அறிவித்தபடி ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை வழங்குவதில்லை என்று Coles நிறுவனமும் அறிவித்துள்ளது.
குயின்ஸ்லாந்து, விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை ஜூலை ஒன்றாம் தேதி நடைமுறைக்குவருகிறது. தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா மாநிலங்களிலும் மற்றும் கான்பெரா அமைந்துள்ள ACT பிராந்தியத்திலும் பிளாஸ்டிக் பைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை இல்லாத ஒரே மாநிலமாக நியூசவுத்வேல்ஸ் இருக்கப்போகிறது.
