இந்தோனேஷியாவில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய நபருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் Gold Coast பகுதியைச் சேர்ந்த 43 வயதான இந்நபருடன் சேர்த்து அவரது இந்தோனேஷிய பெண் நண்பியும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் 11.6கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் உல்லாச விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் - பொலீஸாரினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தற்போது சிறைக்கு கொண்டுசெல்லப்படுவதற்காக பொலீஸ் தடுப்புக்காவலில் உள்ளனர் என்றும் - தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 3,636 ஆஸ்திரேலிய டொலர்கள் என குறிப்பிடப்படுகிறது.
இந்தோனேஷியாவில் 5 கிராமைவிட அதிகளவான போதைப்பொருளுடன் பிடிபடுபவர்கள் மரணதண்டனைக்கு தகுதியுடையவர்கள் என்ற சட்டம் அந்நாட்டில் நடைமுறையிலுள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
