2014-15 வருட காலப்பகுதியில் 33,000 போலியான 50 டொலர் நோட்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் நோட்டுகளின் ஒரு சிறு தொகையாக இருக்கும் என்று காவல்துறை நம்புகிறது.
ஆஸ்திரேலிய பணத் தாள்கள் 1988ம் ஆண்டு முதல் பாலிமர் எனப்படும் ஒருவகை பிளாஸ்டிக் தாள்களில் அச்சடிக்கப்படுகின்றன. இந்தப் பாலிமர் ஆஸ்திரேலிய விஞ்ஞான ஆராய்ச்சி அமைப்பான CSIROவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டன. காகிதத் தாள்கள் விரைவில் பழுதாகிப் போவதாலும், புதிதாக சந்தைக்கு வந்திருந்த அச்சு இயந்திரங்கள் பல வர்ண நிறங்களில் வீடுகளிலேயே அச்சடிக்கக் கூடியதாக இருந்தமையாலும் போலியான பணத்தாள்கள் புழக்கத்தில் வரும் என்று எதிர்பார்த்த ஆஸ்திரேலிய மத்திய வங்கி, அதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தது. இருந்தாலும், புதிய பாலிமர் பணத்தாள்களை ஆஸ்திரேலிய வெளியிட முன்னரே, Costa Rica மற்றும் Haiti போன்ற நாடுகள் பாலிமர் பணத்தாள்களை வெளியிட்டு விட்டன. பரீட்சார்த்தமாக இந்த நாடுகள் வெளியிட்ட பணத்தாள்களிலுள்ள அச்சுகள் மசிந்து போனமையால், அதற்கு உபயோகப்படுத்தப்பட்ட பாலிமரை விட, ஆஸ்திரேலியா உபயோகித்த பாலிமர் சிறந்தது என்று அதற்குப் பின்னர் பணத்தாள்களை பாலிமரில் அச்சிட்ட நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஆஸ்திரேலியப் பணத்தாளுக்கு ஆபத்து
அப்படிச் சிறப்பு வாய்ந்த ஆஸ்திரேலியப் பணத்தாளுக்கும் ஆபத்து வந்திருக்கிறது.... யாரால்? திருட்டு வகையில் பணம் சம்பாதிக்கத் தேடும் கும்பல்களால்!
இந்தக் கள்ளப் பணத்தாள்கள் எல்லாம் ஒரே இடத்தில் அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தாலும் பேர்த் நகருக்கருகிலுள்ள புறநகரிலும், விக்டோரிய மாநிலத்தில் ஒரு இடத்திலும் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்த தனிப்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விக்டோரிய மாநிலத்தில் செப்டம்பர் மாதத்திலிருந்து ஆயிரத்தி அறுபதுக்கும் அதிகமான கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு வராத்திற்கு ஒருவர் என்ற கணக்கில், கள்ளநோட்டுகளை அச்சடிப்பவர்கள் அகப்படுவதாக விக்டோரிய மாநில குற்றவியல் பிரிவு தரவு வெளியிட்டுள்ளது. ஒரே இலக்கம் கொண்ட 50 டொலர் தாள்கள் 760 இடங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை சொல்கிறது. 2015ம் ஆண்டு நடைபெற்ற விசாரணை ஒன்றில், கள்ளநோட்டு என்று புலப்படாத வகையில் அச்சிடப்பட்ட ஆயிரமாயிரம் பணத்தாள்கள், நீதிபதி John Smallwood அவர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டன.
கள்ளநோட்டுகளின் புழக்கம் ஆஸ்திரேலியாவில் அதிகரித்திருந்தாலும், மற்றைய நாட்டுப் பணத்தாள்களுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலிய டொலர் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்படுவது மிகக்குறைவு என்று மத்தியவங்கிப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
உங்கள் பையிலுள்ள 50 டொலர் நோட்டு உண்மையானதா? போலியானதா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
ஆஸ்திரேலிய பணத்தாள்கள் பாலிமரினால் செய்யப்பட்டவை என்பதால், காகிதப் பணத்தைப் போல அவற்றைக் கிழிக்க முடியாது. காகிதம் போல அவை கசங்கிய நிலையில் இருக்காது. மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். எனவே, உங்களிடமிருக்கும் பணத்தாள் உண்மையானதா என்று அறிந்து கொள்ள, அதனைக் கிழிக்க முடியுமா என்று பாருங்கள், கிழிந்தால் அது கள்ளநோட்டு.
அடுத்தது, பணத்தாளை, உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உங்கள் கையை மூடி சற்று நேரம் இருந்து விட்டு, கையை விரிக்கும் போது பணத்தாள் மீண்டும் தனது பழைய உருவத்திற்கு வரவில்லையென்றால், நிச்சயம் அது கள்ளநோட்டுத்தான். பலர் கையாண்ட ஆஸ்திரேலிய பணத்தாளாக இருந்தால் பழைய நிலையை அடைய சற்று நேரமாகலாம்.
இதனைவிட, மத்திய வங்கி பணத்தை அச்சிடும்போதே தனிச்சிறப்பான சில பாதுகாப்பு விடயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பணத்தாளிலுள்ள தெளிவான அல்லது ஒளிபுகும் பகுதி, பணத்தாள் உருவாக்கும் போதே அமைந்திருப்பதால், அதன்மேல் விரலால் தடவும்போது மேடாக இருக்காது, ஒட்டப்பட்டது போல் தோன்றாது. அந்தத் தெளிவான பகுதி தெளிவில்லாமலிருப்பதும் கள்ளநோட்டு என்பதன் ஒரு அறிகுறி.
இந்தத் தெளிவான பகுதியில், ஆஸ்திரேலிய கொடியிலிருப்பது போல், Southern Cross போன்ற ஏழு முனைகள் கொண்ட நான்கு நட்சத்திரங்களும், ஒரு சிறிய நட்சத்திரமும் வெள்ளை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். உண்மையான பணத்தாளில், விரலால் அல்லது ஒரு நாணயத்தால் சுரண்டினால் அந்த நட்சத்திரத்திரங்களுக்கு ஒன்றும் நடக்காது.தெளிவான பகுதிக்கு அருகில் சிறு வட்டத்தினுள் முக்கோண அமைப்புகளைக் காண்பீர்கள். பணத்தாளை ஒளிக்கெதிராகப் பிடிக்கும் போது, அந்த வட்டத்தினுள் அழகான ஏழு முனைகள் கொண்ட நட்சத்திரம் தெரிந்தால் அது உண்மையான பணத்தாள்.
அப்படி ஒளிக்கெதிராகப் பணத்தாளைப் பிடிக்கும் போது, ஆஸ்திரேலிய மரபுச்சின்னங்கள், Coat of arms, கங்காரு, ஈமு, மற்றும் கேடயம் என்பனவும் அந்த வட்டத்திற்கு சற்று மேலே தெரிய வேண்டும்.
பணத்தாளிலுள்ள படத்தின் மேல் விரலை வருடினால், தாளை விட அந்தப் படங்கள் சற்று உயர்ந்து இருப்பதை அவதானிப்பீர்கள். கூடவே, ஒரு பூதக் கண்ணாடி கையில் அகப்பட்டால் அதனைக் கொண்டு நீங்கள் பணத்தாளை நோக்கினால், அந்தப் பணத்தாளின் மதிப்பு, மிகச்சிறிய ஆங்கில எழுத்துகளில் பதியப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
Ultra violet எனப்படும் புற ஊதா ஒளி பணத்தாள் மீது வீசப்பட்டால், பணத்தாளின் வரிசை எண் ஒளிரக் காண்பீர்கள்.
2002ம் ஆண்டிற்குப் பின்னர் அச்சடிக்கப்பட்ட பணத்தாள்களில் தான் பணத்தாளிலுள்ள உருவப்படங்களிலிருப்பவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும். அதற்கு முந்தைய தாள்களில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்படவில்லை. வரிசை எண்ணிலுள்ள முதல் இரண்டு இலக்கங்களும் அந்தப் பணத்தாள் எந்த வருடம் அச்சடிக்கப்பட்டது என்பதை அடையாளம் காட்டும். உதாரணமாக, 99 என்று ஆரம்பிக்கும் வரிசை எண்ணைக் கொண்ட தாள், 1999ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டது. அதே போல், 03 என்று ஆரம்பிக்கும் வரிசை எண்ணைக் கொண்ட தாள், 2003ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டது.
என்ன செய்யலாம்?
சரி, உங்கள் கையில் ஒரு கள்ளநோட்டு அகப்பட்டால் நீங்கள் என்ன செய்யலாம்? பணத்தாளை நீங்கள் கையாள்வதைக் குறைத்து அதனை ஒரு உறையினுள் போடுங்கள். அந்தப் பணத்தாள் உங்கள் கைகளுக்கு எப்படி வந்தது என்பதற்கான முழுக்குறிப்புகளையும் தெரிந்தவரை எழுதிக்கொள்ளுங்கள். இந்த விபரங்களுடன் காவல்துறையை அணுகுங்கள். உங்களிடம் அகப்பட்ட கள்ளநோட்டிற்கான பணத்தை யாரும் ஈடு செய்ய மாட்டார்கள் என்பது வருந்தத்தக்கது. ஆனால் இந்தச் செயற்பாட்டை நிறுத்துவதற்கு காவல்துறையிடம் முறையிடுவது தான் ஒரே வழி.
