நவுறு தீவிலுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றை காரணம் காண்பித்து ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
மனுஸ் மற்றும் நவுறு தீவிலுள்ள அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு வகை செய்யும் சட்டத்தை மாற்றுவதற்காக லிபரல் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக Peter Dutton, Sky News ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
'மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு வரமுடியும் என்ற சட்டம் நடைமுறையிலிருக்கும்வரையில் அந்த சட்டத்திற்குள்ளேயும் அதைச்சுற்றியும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மனுஸ் - நவுறு அகதிகள், ஆஸ்திரேலியாவுக்குள் வந்துவிடுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். நவுறுவில் தாங்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதனால் உருவான கருவை கலைக்க விரும்புவதாகவும் கூறி, ஆஸ்திரேலியாவுக்கு வருகின்ற பெண்கள் ஆஸ்திரேலியா வந்த உடனேயே இங்கு தஞ்சம் கோரி வழக்குத்தாக்கல் செய்துவிட்டு, கருவை கலைப்பதற்கு விருப்பமில்லை என்று கூறிவிடுகிறார்கள். இதனால், நவுறுக்கு திரும்பிச்செல்லாது ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிடுவதற்கான காரியங்களை மேற்கொண்டுவிடுகிறார்கள் - என்று Peter Dutton கூறியிருக்கிறார்.
எனினும் Peter Dutton-இன் இக்கூற்றினை அகதிகள் நல செயற்பாட்டாளர்களும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்பினரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
Share
