ஆஸ்திரேலியாவின் 46 ஆவது நாடாளுமன்றத்தில் லிபரல் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்னும் முழுமையான முடிவுறாத நிலையில் தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் லிபரல் கூட்டணிக்கு 77 ஆசனங்கள் கிடைக்கும் என்று ABC கணித்துள்ளது.
தற்போதுவரைக்கும் உறுதிசெய்யப்பட்ட தகவல்களில்படி லிபரல் கட்சிக்கு 75 ஆசனங்களும் லேபருக்கு 66 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
முன்னாள் பிரதமர் Malcolm Turnbull தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, வெற்றிடமான சிட்னியின் Wentworth தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றியீட்டிய Kerryn Phelps தனது தோல்வியை அறிவித்துள்ளார். அந்த ஆசனத்தை லிபரல் கட்சியின் Dave Sharma கைப்பற்றுகிறார்.
மிகுதியுள்ள ஆசனங்களில் இரண்டு ஆசனங்களை லிபரல் நிச்சயம் கைப்பற்றும் என்று உறுதிபடக்கூறியுள்ள ABC, அவ்வாறு 77 ஆசனங்களை லிபரல் கூட்டணி பெற்றுக்கொள்ளும்போது சபாநாயகரை அவர்களே நியமித்துக்கொள்ளுமளவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 76 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என்று எதிர்வுகூறியுள்ளது.
லிபரலுக்கு கிடைக்கப்போகும் இறுதி இரு ஆசனங்களும் Boothby மற்றும் Chisholm என்று ABC தெரிவித்துள்ளது.
