பிரதமர் Malcolm Turnbull- இன் தலைமைத்துவத்திற்கு Peter Dutton இரண்டாவது தடவையாக சவால் விடுத்துள்ள நிலையில் லிபரல் கட்சிக்குள் தனக்கான பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால் இரண்டாவது சவாலில் கலந்துகொள்வதிலிருந்து தாம் ஒதுங்கிக் கொள்வதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
தலைமைத்துவ சவாலில் தன்னைத் தோற்கடிப்பதற்குத் தேவையான ஆதரவு Peter Dutton அணியினரிடம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் கடிதத்தை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ள பிரதமர் அவ்வாறு நிரூபிக்கும்பட்சத்தில் நாளை மதியம் கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தை கூட்டத்தயார் என்றும் அறிவித்துள்ளார்.
இதேவேளை அரச மானியம் பெறும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இரண்டில் உள்ள பங்கு தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் Peter Dutton-க்கு நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதற்கான தகுதி உள்ளதா என்ற விடயத்தில் சட்ட ஆலோசனை பெறுமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தலைமைத்துவத்திற்கான இரண்டாவது போட்டி நடைபெறும்பட்சத்தில் நாடாளுமன்றில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் எண்ணம் கிடையாது என்பதையும் பிரதமர் இன்று நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் வெளிப்படுத்தியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க தலைமைத்துவத்திற்கு இரண்டாவது தடவையாக சவால் விடுத்துள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் Peter Dutton-க்கு எதிராக Treasurer-கருவூலக்காப்பாளர் Scott Morrison போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
