நாட்டின் சுதந்திர தினம், உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி இரண்டும் அடுத்தடுத்த தினங்களில் வருவதால் பிரான்ஸில் வார இறுதி நாட்கள் பெரும் களைகட்டப்போகின்றன.
Bastille Day எனப்படும் தேசிய தின நிகழ்ச்சிகள் சனிக்கிழமை காலை முதல் பாரிஸ் நகரின் கேந்திர மையத்தில் வழமை போல பிரமாண்டமான படை அணிவகுப்புகளுடன் நடைபெற இருக்கின்றன.
இந்தமுறை நிகழ்வின் மதிப்புக்குரிய விருந்தினராக சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien கலந்து கொள்கிறார். அவருடன் ஜப்பானிய பிரதமர் Shinzo Abe அவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக அவர் இங்கு வருகை தர மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் வான் படையினருடன் இணைந்து சிங்கப்பூர் விமானப் படையினர் நடத்தவுள்ள விண் அணிவகுப்பு, இம்முறை விழாவின் சிறப்பு நிகழ்வாக அமைகின்றது.
குறோசியாவை எதிர்த்து பிரான்ஸ் அணி மோதவுள்ள உலகக்கிண்ண இறுதி ஆட்டம் பிரான்ஸ் நேரப்படி ஞாயிறு மாலை மொஸ்கோவில் நடைபெற உள்ளது. இறுதி ஆட்டத்தைக் கண்டுகளிக்கவென பாரிஸ் நகரில்- ஈபிள் கோபுரம் அருகில்- Champ de Mars பகுதியில் பிரமாண்டமான அகலத் திரையுடன் கூடிய ரசிகர் வலயம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் ஒரு இலட்சம் ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது.
1998 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இந்தமுறை மிகப் பிரகாசமாக இருப்பதால் ரசிகர்கள் இடையே பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்புக் காணப்படுகிறது. இதனால் ஆட்டம் நிறைவடையும் சமயத்தில் உருவாகக் கூடிய ஆர்ப்பரிப்பு நிலைமைகள் கட்டு மீறுவதைத் தடுக்கப்பாதுகாப்புத் தரப்பினர் முழு ஆயத்த நிலையில் உள்ளனர்.
நாடு முழுவதும் ஒரு லட்சம் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பாரிஸ் நகரில் மட்டும் மேலதிகமாக 12 ஆயிரம் பொலிஸாரும் 3 ஆயிரம் மீட்புப் பணியாளர்களும் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் குழப்பங்கள் ஏதுமின்றி கொண்டாட்ட நிகழ்வுகளில் மக்கள் அமைதியாகப் பங்குபற்றுவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி:குமாரதாசன்-பிரான்ஸ்
