SKIP TO MAIN CONTENT

பெற்றோர் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் தங்குவதற்கு வீசா

Passport / Visa
Source: Getty Images

1 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

தாம் மீண்டும்ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலியாவிற்கு வரும் பெற்றோர் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் இங்கே தங்குவதற்கு அனுமதிக்கப்போவதாக Coalition கட்சிகள் உறுதியளித்துள்ளன.  நிரந்தர பெற்றோர் வீசாவிற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் ஐந்து வருடத்திற்குத் தொடர்ச்சியாக இருக்க விண்ணப்பித்தால் அப்படியான அனுமதி வழங்கும் பழக்கம் தற்போது உள்ளது.  அதிலும் ஒவ்வொரு விண்ணப்பமும் தனியாகப் பரிசோதித்த பின்னரே அப்படியான வீசா வழங்கப்படலாம் என்ற முறை நிலவுகிறது.

"தென்னாசிய நாடுகள் முக்கியமாக இந்தியா சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களது கலாச்சாரத்தில் பெற்றோரும் பேரரும் குடும்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை Coalition கட்சிகள் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறது" என்று சொன்னார், குடிவரவு அமைச்சர் Peter Dutton.

"அந்தக் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைப்பது முக்கியம் என்பதை நாம் உணரும் அதே வேளை, அப்படிச் செய்வதால், ஆஸ்திரேலிய சுகாதார சேவைகள் பாதிக்கப்படா வண்ணம் நாங்கள் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Parental Visa
Source: SBS Punjabi

இப்படியான ஐந்து வருட வீசாவைப் பெற்றோருக்குப் பெற விரும்புவர்கள் தனியார் மருத்துவக் காப்புறுதி (private health insurance) ஒன்றை ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடமிருந்து அவர்களது பெற்றோருக்குப் பெற வேண்டும்.  அத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகையை காப்புப் பணமாகக் (bond) கட்டவேண்டும்.

இதேபோலதொரு கொள்கையை Labor கட்சியும் அண்மையில் அறிவித்திருந்தது.  அந்த வீசா முறையிலும் தனியார் மருத்துவ காப்புறுதி மற்றும் 5,000 டொலர் காப்புப்பணம் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது பெற்றோருக்கு வழங்கப்படும் வீசா, 12 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.  இதனை நீட்டிக்க வேண்டுமென்ற இருபதாயிரம் கையெழுத்துகளைத் தாங்கிய கோரிக்கை கடந்த வருடம் குடிவரவுத் துறையால் நிராகரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now