பிரிஸ்பேன் Moorooka எனுமிடத்தில் பேருந்தினுள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டவர் இந்தியப் பின்னணி கொண்ட Manmeet Alisher என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரிஸ்பேன் பெருநகரின் Moorooka எனுமிடத்தில் Beaudesert சாலையின் அருகே பேருந்து நின்றபோது அதில் ஏறிய மூன்று பயணிகளில் ஒருவர் திடீரென்று பேருந்து ஓட்டுனரான Manmeet Alisher மீது பெட்ரோல் போன்ற தீப்பற்றும் திரவத்தை ஊற்றி தீயிட்டு கொளுத்தினார். கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பற்றிக்கொள்ள, Manmeet Alisher உயிரிழந்தார்.
29 வயதான Manmeet Alisher ஒரு பாடகர் என்பதுடன் பல பொது நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் ஒருவர் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் கொலையாளி என்று நம்பப்படும் 48 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக்கொலையை ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகத் தாம் கருதவில்லை என்றும் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பேருந்து ஓட்டுனர் Manmeet Alisher எரித்துக் கொல்லப்பட்ட வேளையில் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை பேருந்து அருகே டாக்ஸி ஓட்டிவந்த Aguek Nyok என்பவர் சமயோசிதமாக பேருந்தின் பின்பக்கத்தைத் திறந்து பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளார். கொலை நடந்த கோரத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறும் போலீசார், Aguek Nyok யின் வீர தீர செயலை பாராட்டியுள்ளனர்.
