நியூசிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகளில் ஒன்றான மவுரி மொழியை சகல முன்பள்ளிகளிலும் பிரதான பாடமாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக நியூசிலாந்து நாட்டின் மவுரி மொழி அமைச்சர் Nanaia Mahuta தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் பூர்வீக மொழிகளில் ஒன்றான மவுரி தற்போது பெரியளவில் அங்கு பேசப்படுவதில்லை. ஆனாலும் நியூசிலாந்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் நியூசிலாந்து சைகை மொழியுடன் மவுரி மொழிக்கு அரசு முக்கியத்துவம் அளித்திருக்கிறது.
இதேவேளை 2013 ஆம் ஆண்டு நடத்திய நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டபடி, சுமார் ஐம்பதினாயிரம் பேரளவில் மவுரி மொழியில் உயர் பாண்டித்தியம் பெற்றவர்களாக உள்ளபோதிலும் அந்த மொழிக்குரிய தனித்துவமான மதிப்பும் கௌரவமும் அருகிவருவதாக நியூஸிலாந்து பிரதமர் Jacinda Ardern கவலை தெரிவித்துள்ளார்.
'நாங்கள் யார் என்று அடையாளப்படுத்தும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று மொழி. அதனை நாங்கள் இழந்துவிடக்கூடாது. மவுரி மொழியை தெரிந்த கடைசித்தலைமுறை நாங்கள்தான் என்ற துயரமான வரலாறு தோன்றிவிடக்கூடாது" - என்று பிரதமர் Jacinda Ardern கூறியுள்ளார்.
அண்மையில் தனது முதலாவது குழந்தைக்கு தாயாகியுள்ள நியூஸிலாந்து பிரதமர், தனது மகளுக்கு ஆங்கிலத்தோடு மவுரி மொழியையும் கற்பிக்கப்போவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து நாட்டின் மவுரி மொழி அமைச்சர் Nanaia Mahuta இது தொடர்பான கூறும்போது 'நாங்கள் நியூஸிலாந்து நாட்டவர்கள் என்று எங்களை அடையாளப்படுத்துவதற்கு மிகச்சிறந்த மார்க்கம் மவுரி மொழியே ஆகும். தற்போதைய நிலையில் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள முன்பள்ளிகளில் இந்த மொழியை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதற்கு ஆசிரியர்களை நியமிப்பது மிகவும் சவாலான விடயம். ஆனால், 2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் அதற்குரிய சகல நடவடிக்கையையும் மேற்கொண்டு எமது பூர்வீக மொழியை சகல பாடசாலைகளிலும் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுடன் கட்டாய பாடமாக்குவோம்" - என்று தெரிவித்துள்ளார்.
