SKIP TO MAIN CONTENT

பிரியா குடும்பம் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டது!

TAMIL FAMILY DEPORTATION
The Biloela family and their supporters hope they will be allowed to stay in Australia permanently. Source: AAP

3 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மெல்பேர்னில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கை கடைசிநேரத்தில் தடுக்கப்பட்டு டார்வினில் தங்கவைக்கப்பட்டிருந்தநிலையில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவிலிருந்து குறித்த குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலை தடுப்பதற்காக போராடும் home to Bilo குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களும் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த குடும்பம் பலரது எதிர்ப்பையும் மீறி விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த பின்னணியில் குறித்த விமானம் நேற்று அதிகாலை டார்வினைச் சென்றடைந்த போது இக்குடும்பம் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக ஒரு இடத்தில் தங்கவைக்கப்பட்டதுடன்  எதிர்வரும் புதன்கிழமை வரை அவர்களை நாடுகடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் இரண்டாவது மகள் தருணிகாவை மையப்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த இடைக்காலத்தடையை  விதித்திருந்த பின்னணியில் இக்குடும்பம் இரவோடிரவாக கிறிஸ்மஸ் தீவு இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டுசெல்ப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் உள்துறை அமைச்சிடம் கருத்துக்கேட்டபோது இவ்விவகாரம் நீதிமன்றத்தின் முன்பாக இருப்பதால் பதிலளிப்பது சரியாகாது என குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நீதிமன்ற அமர்வில் பிரியா குடும்பத்தினரின் நாடுகடத்தல் விவகாரத்திற்கு இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பின்னணியில் இக்குடும்பம் கிறிஸ்மஸ் தீவு இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு தருணிக்கா உட்பட ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று மெல்பேர்ன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இறுதி முயற்சியாக குழந்தை தருணிக்கா தன்னை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்தக் கோரிக்கையை அமைச்சரிடம் அனுப்பி வைக்க மறுத்து விட்டனர்.

இது இவ்வாறிருக்க நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்துவந்த Biloela பகுதி மக்கள் இக்குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததுடன் பேரணி, கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்ட போதும், இக்குடும்பத்திற்கு கருணைகாட்ட முடியாது என உள்துறை அமைச்சர் Dutton தொடர்ந்தும் மறுத்துவந்தநிலையில் இந்நாடுகடத்தல் முயற்சி மற்றுமொரு தடவை தடுக்கப்பட்டுள்ள போதிலும் இக்குடும்பம் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இதேவேளை பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலை தடுத்து அவர்களை மீண்டும் Biloela-வில் வாழ அனுமதிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் நாளை ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு நாடுதழுவியரீதியில் ஆர்ப்பாட்டமொன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now