கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் கோபிகா & தருணிகா ஆகியோர் குறித்த நீதிமன்ற விசாரணை செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் செய்தி நாமறிந்தது.
நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் இந்த குடும்பத்தை உடனடி இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த குடும்பத்திற்கு ஆதரவாக குரல்கள் வலுத்துவருவதால் இந்த குடும்பம் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்ப அரசு தடையாக இருக்காது என்று உயர்மட்ட அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக The New Daily மற்றும் 7NEWS எனும் ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.
அகதி அந்தஸ்து கோருதல் தொடர்பான தற்போதைய ஆஸ்திரேலிய விதிமுறைகளின்படி, ஒருவரின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர் திரும்பிச் செல்ல மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாக அவரின் நாட்டுக்கு அரசு திரும்ப அனுப்பிவைக்கும். அப்படி வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட ஒருவர் மீண்டும் ஆஸ்திரேலியா வருவதற்கு விண்ணப்பிக்க ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்படும். அதன் பின்னரே அவர் விண்ணப்பிக்க இயலும். மேலும், அவர் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட அரசு எவ்வளவு பணம் செலவளித்ததோ அந்த பணத்தையும் அவர் கட்ட வேண்டும். அப்போதுதான் அவர் மீண்டும் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்படுவார்.
பிரியா-நடேஸ் குடும்ப விடயத்தில், அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டாலும், இந்த இரு நிபந்தனைகளையும் விலக்கிக்கொள்ள அரசு இணக்கம் தெரிவித்திருப்பதாக அந்த ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரியா-நடேஸ் குடும்பத்தை இலங்கைக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் அரசின் நடவடிக்கையில் அரசு பல லட்சம் டாலர்களை வரை இதுவரை செலவளித்திருக்கும் என்று முன்னாள் Immigration மற்றும் Citizenship துறையின் துணை செயலாளர் Abul Rizvi அவர்கள் The New Daily யிடம் கூறியுள்ளார். இப்படியான செலவை பிரியா-நடேஸ் குடும்பத்திடமிருந்து வசூலிப்பதில்லை என்பதற்கு அரசு இணங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Biloela நகரில் இயங்கும் Teys Australia எனும் இறைச்சி கடையில்தான் நடேஸ் முன்பு வேலை செய்தார். இந்த நிறுவனம் தற்போது அவருக்கு வேலை தரவும், அவரை Sponsor செய்யவும் தயாராக உள்ளது. எனவே நடேஸ் அவர்கள் இலங்கை திரும்பியபின் Work Visaவுக்கு அவர் உடனடி விண்ணப்பிக்கவும், அவருக்கு Work Visa வழங்கி அவரும் குடும்பமும் சட்டப்படி ஆஸ்திரேலியா வரவும், அதன் பின்னர் அவர்களுக்கு விரைவில் நிரந்தர வதிவிட விசா (Permanent Residency) வழங்கவும், இறுதியில் குடியுரிமை (Citizenship) தரவும் அரசு இணங்குவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரியா-நடேஸ் மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் கோபிகா & தருணிகா குடும்பம் கட்டாயம் இலங்கை திரும்பவேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கும் அதே வேளையில் இந்த குடும்பம் மீண்டும் Biloela திரும்ப அரசு தடையாக இருக்காது என்ற ரீதியில் அதிகாரிகள் பேசி வருவதாக நம்பப்டுகிறது.