புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள பிரபஞ்சன் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இன்று காலமானார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் 1945-ம் ஆண்டு பிறந்த பிரபஞ்சன் பத்திரிகைகள் மூலம் தனது எழுத்துப்பணியை தொடங்கினார்.
இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
1995ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது வரலாற்றுப் புதினமான ‘வானம் வசப்படும்’ ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது.
இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப்பட்டுள்ளது.
Share
