பிரபல நாடக கலைஞர், கதாசிரியர், நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் தனது 66வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
சென்னையை சேர்ந்த கிரேஸி மோகன் 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன் ரெங்கமாச்சாரி. பொறியல் பட்டதாரியான இவர், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதுவே அவரை நாடகங்கள் மற்றும் சினிமாவில் எழுத வைத்தது.
கிரேஸி மோகன் முதன் முதலில் பாலசந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுதினார்.பின்னர் கமலின் நட்புக் கிடைக்க அவரது பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு இவர் தான் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.
அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை பெரிதாக பேசப்பட்டது.
நடிகராகவும் பல படங்களில் தோன்றிய கிரேஸி மோகன் தன் சகோதரர் மாது பாலாஜி உடன் இணைந்து பல மேடை நாடகங்களை இயற்றியுள்ளார். குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த, "மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா" போன்றவை மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றவை.
இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான நாடகங்களை மேடையேற்றிய கிரேஸி மோகன் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தினம் ஒரு வெண்பா எழுதுவதை வழக்கமாகக் கொண்ட இவர் இதுவரை 40 ஆயிரம் வெண்பாக்களையும் எழுதி உள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன் இன்று மதியம் 2 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது.
Share
