ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மீது முட்டை அடிக்க முயன்ற பெண் நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்குரிய தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.
சிறை செல்லாது 18 மாதங்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் சமூகத்தில் அவருக்குரிய தண்டனையை (community corrections order) நிறைவேற்றிக்கொள்ள Albury Local Court நீதிபதி உத்தரவிட்டார்.
அதேவேளை சம்பவம் நடைபெற்றபோது குறிப்பிட்ட பெண் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றத்திற்கு 150 மணிநேரம் ஊதியமற்ற சமூகத்தொண்டாற்றும் (community service) உத்தரவும் வழங்கப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை Albury நீதிமன்றில் குறிப்பிட்ட பெண்ணுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தீர்ப்பினை நீதிபதி வழங்கினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பிரச்சாரக்கூட்டத்திற்காக Scott Morrison, Albury பகுதிக்கு வந்திருக்கிறார் என்ற செய்தியை வேலைக்கு போய்க்கொண்டிருந்தபோது குறித்த பெண் வானொலியில் கேட்டிருக்கிறார். உடனடியாக பல்பொருள் அங்காடிக்கு சென்று முட்டையை வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுள்ளார்.
Scott Morrison-க்கு பின்பக்கமாக சென்று முட்டையை எடுத்து அவரது தலையில் அடிப்பதற்காக கொண்டுசென்றபோதும் முட்டை கை நழுவி கீழே விழுந்துவிட்டது. அவரது கை மாத்திரமே Morrison-இன் பிடரியில் அடிபட, Morrison நிலைதடுமாறி முன்பக்கமாக சரிந்துகொண்டபோதும் சுதாரித்துக்கொண்டார்.
தாக்குதலை நடத்திய பெண் ஏற்கனவே வேறொரு விவகாரத்தில்18 மாத நன்னடத்தைப் பிணையில் இருந்தவர் என்றும் அதனை நிறைவுசெய்வதற்கு ஏழு நாட்களே மீதமிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டபோதும் அவரது குற்றப்பின்னணி மற்றும் ஏனைய தகவல்களை பரிசீலித்து நீதிபதி மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.
