SKIP TO MAIN CONTENT

புதிதாக வருபவர்களை புறநகர் பகுதிகளுக்கு அனுப்பும் ஆஸ்திரேலியச் சட்டம் தயார்?

sbs
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்களை regional areas-புறநகர் பகுதிகளில் குடியமர்த்தும்வகையிலான சட்டமுன்வடிவு நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது புதிய அமைச்சரவை முன் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடத்தில் மாத்திரம் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்களில் 87 சதவீதமானவர்களுக்கும் அதிகமானவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகர் பிரதேசங்களை அண்டியே தங்களது இருப்பிடங்களை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று தரவுகள் மூலம் தெரியவந்திருப்பதாக குடிவரவு அமைச்சு தெரிவித்திருந்தது.

எனவே ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்களை அண்டிய பகுதிகளில் புதிய குடிவரவாளர்கள் பெருமளவில் குடியேறுவதால் ஏற்பட்டுள்ள சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பொருட்டு, இனிமேல் புதிதாக விஸா பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேற வருபவர்களை புறநகர் பகுதிகளை நோக்கி அனுப்புவதற்கு ஏதுவான சட்டத்தை கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி புதிய குடிவரவாளர்களின் விசா நிபந்தனைகளில் மாற்றம் கொண்டுவந்து அவர்களை   ஆகக்குறைந்தது 5 வருடங்களுக்கு புறநகர் பிரதேங்களுக்குச் சென்று குடியமர்வதை உறுதிப்படுத்தும் புதிய சட்டமுன்வடிவொன்றை குடிவரவு அமைச்சு நாடாளுமன்றுக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்புதிய சட்டமுன்வடிவு கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்படவிருந்தபோதும், லிபரல் கட்சியினரின் தலைத்துவ இழுபறிப்பிரச்சினையால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றநிலையில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது இது  நிறைவேற்றப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய சட்டமுன்வடிவின்படி, தொழில்துறை விஸா, குடும்பங்களோடு இணைவதற்கான விஸா மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர் விஸா போன்ற எந்தப்பிரிவில் வருகை தருபவர்களாக இருந்தாலும், அவர்கள் புறநகர் பகுதிகளுக்குச் சென்று சுமார் 5 வருடங்களுக்கு குடியமர்வதற்கு உத்தரவிடப்படுவர் என்று தெரியவருகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now