ஆஸ்திரேலியாவில் புதிய 50 டொலர் நாணயத்தாள்/நோட்டு எதிர்வரும் அக்டோபர் 18ம் திகதி முதல் புழக்கத்திற்கு வரும் என ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் இலகுவாக அடையாளம் காணும் வகையிலும், போலி நோட்டுக்களை அச்சடிக்க முடியாதவாறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடனும் இப்புதிய 50 டொலர் நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 18ம் திகதி குறித்த நோட்டுக்கள் பொதுமக்கள் பாவனைக்கு விடப்படுவதற்கு முன்னதாக இன்றையதினம் Vision Australia-வில் அங்கம் வகிக்கும் பார்வைப்புலன் குறைபாடு உடையவர்கள் மத்தியில் புதிய 50 டொலர் நோட்டுக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டு அவர்களுடைய அனுபவங்கள் கேட்டறியப்பட்டன.
கடந்த வருடம் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 5 மற்றும் 10 டொலர் நோட்டுக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது எந்த சிக்கல்களுமின்றி புதிய 50 டொலர் நோட்டுக்கள் மக்கள் பாவனைக்கு வரும்வகையில், பணம் பெறும் இயந்திரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


