ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பாவனைக்கு விடப்பட்ட புதிய 50 டொலர் நாணயத்தாள்களில் பாரிய எழுத்துப்பிழை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்புதிய 50 டொலர் தாள்களில் பூர்வகுடி எழுத்தாளர் David Unaipon மற்றும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றுக்குத் தெரிவான முதல் பெண்மணி Edith Cowan ஆகியோரது படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் Edith Cowan அவர்களது முதலாவது நாடாளுமன்ற உரையின் பாகமும் அச்சிடப்பட்டுள்ள நிலையில் குறித்த உரையின் “it is a great responsibility to be the only woman here”, என்ற வசனத்திலுள்ள "responsibility" என்ற சொல் தவறாக "responsibilty" என அச்சிடப்பட்டுள்ளது. 3 தடவைகள் இச்சொல் தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
இத்தவறை Triple M வானொலிக்கு நேயர் ஒருவர் அறியத்தந்திருந்தார்.
இதையடுத்து குறித்த தவறினை ஏற்றுக்கொண்டுள்ள ரிசேர்வ் வங்கி தமது அடுத்த பதிப்பில் இத்தவறினைத் திருத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இதேவேளை இவ்வெழுத்துப்பிழையுடன் சுமார் 400 மில்லியன் 50 டொலர் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
