பெருந்தொகையான அதிகாரங்களுடன் பல அமைச்சுப்பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருந்த Peter Dutton-க்கு புதிய பிரதமர் Scott Morrison-இன் அமைச்சரவையில் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
அவருக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சு மாத்திரமே பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது. அவர் வசம் முன்பு ஒப்படைக்கப்பட்டிருந்த குடியுரிமை மற்றும் குடிவரவு - குடியகல்வு அமைச்சு அதிகாரங்களை David Coleman-க்கு வழங்கியிருக்கிறார் பிரதமர் Scott Morrison.
முன்னாள் பிரதமர் Malcolm Turnbull அவர்களின் அமைச்சரவையில் குடிவரவு - குடியகல்வு அமைச்சராக பதவியேற்ற Peter Dutton-க்கு கடந்த 2017 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சும் மேலதிகமாக கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டு அமைச்சுக்களின் அடிப்படையில் அவர் கொண்டிருந்த அதிகாரங்கள் கிட்டத்தட்ட பிரதமரின் அதிகாரத்துக்கு ஈடானவை என்று அப்போது விமர்சிக்கப்பட்டிருந்தது. அந்த ஏகபோக அதிகாரமே அவரை லிபரல் கட்சியில் உட்கட்சி போருக்கு தூண்டியிருந்தது என்றும் அரசியல் வட்டாரங்களில் கடந்த வாரம் விமர்சனங்களாக முன்வைக்கப்பட்டிருந்தன.
அந்தவகையில், தற்போது புதிய அமைச்சரவையை அமைத்திருக்கும் Scott Morrison, உள்துறை அமைச்சுப்பொறுப்பை மாத்திரம் Peter Dutton-டம் வழங்கியிருப்பதோடு அவரது முன்னைய அதிகாரங்களில் பாதியை பறித்து வேறு அமைச்சிடம் ஒப்படைத்திருக்கிறார்.
அதேவேளை, Peter Dutton-இன் நெருக்கத்துக்குரிய Tony Abbott-க்கு Morrison-இன் அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
