அரசு புதிதாக நடைமுறைப்படுத்தவுள்ள சட்டத்தின் கீழ் எத்தனை பேர் நாடுகடத்தப்படவுள்ளார்கள் என்ற எண்ணிக்கை தமக்குத் தெரியாது என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் பாரதூரமான குற்றச்செயல் ஒன்றுக்காக தண்டனைபெற்ற ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களை நாடுகடத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து சென்ட் கேள்வி - பதில் நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, நாடுகடத்தப்படவுள்ளவர்களின் சரியான எண்ணிக்கையை இப்போது கூறமுடியாது என்று உள்துறை அமைச்சின் உதவிச்செயலர் Michael Willard தெரிவித்தார்.
Character test நன்னடத்தை பரிசோதனை அடிப்படையில், குற்றங்களை இழைத்து குறைந்தது 2 வருட சிறைத்தண்டனை தீர்ப்பினை பெற்றுக்கொண்ட ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை ரத்துச் செய்து அவர்களை நாடுகடத்துவதற்கான முனைப்புக்களில் தற்போதைய அரசு ஈடுபட்டுள்ளது.
சிறைத்தண்டனை அனுபவிக்காவிட்டாலும் அதற்குரிய தீர்ப்பு கிடைக்கப்பெற்றாலே அவர்கள் நாடு கடத்தப்படவேண்டியவர்கள் என்ற பட்டியலுக்குள் வந்துவிடுகிறார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தற்போது ஆஸ்திரேலியாவில் மாத்திரமல்ல வெளிநாடுகளிலும் பல விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இச்சட்டத்தினால் நியூசிலாந்து நாட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஆஸ்திரேலிய அரசின் இந்நடவடிக்கையானது தமது நாட்டுடனான உறவில் தாக்கம் செலுத்தும் தன்மையை கொண்டிருப்பதாக அண்மையில் ஆஸ்திரேலியா வந்திருந்த நியூஸிலாந்து பிரதமர் Jacinda Ardern கூறியிருந்தார்.
இந்தப்பின்னணியில் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து தாங்கள் தொடர்ந்து கணக்கெடுத்துவருவதாகவும் அமைச்சுக்கள் மேற்கொள்ளவுள்ள முடிவுகளின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
