குடிவரவாளர்களினால் ஆஸ்திரேலிய பெருநகரங்கள் நிரம்பி வழிவதாகவும் நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகை வேகமாக அதிகரித்துவருவதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டாலும், நாட்டுக்கு வந்துகொண்டிருக்கும் புதிய குடிவரவாளர்களினால் ஆஸ்திரேலியாவுக்கு நன்மைகள்தான் அதிகம் என்றும் புதிய சிந்தனைகள், புதிய கலாச்சாரம் ஆகியவற்றினை உள்வாங்குவதன் மூலம் முன்னேற்றகராமான விளைவுகளே ஏற்படுகின்றன என்றும் Scanlon Foundation அமைப்பு அண்மையில் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 1500 பேரில் 82 வீதமானவர்கள் குடிவரவாளர்களினால் நாட்டுக்கு நன்மைகளே அதிகம் என்று கூறியுள்ளதாகவும், பல்தேசிய கலாச்சார அறிமுகங்களுக்கு அப்பால் ஆஸ்திரேலிய பொருளாதரத்துக்கும் நன்மைகிட்டுவதாகவும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல்தேசிய கலாச்சாரமெனப்படுவது ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்துக்களை கொண்டுவருவதாக ஒருசாரார் கருத்து தெரிவித்துவரும்வேளையில், Scanlon Foundation அமைப்பின் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட அதிகமானோர் பல்தேசிய கலாச்சாரம் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள்.
மேலும் புதிய குடிவரவாளர்களின் வருகையால் ஆஸ்திரேலியர்களுக்கு மாத்திரமல்ல, ஏற்கனவே குடிவரவாளர்களாக இந்த நாட்டில் உள்ளவர்களுக்கும் பயன் கிடைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை ஆண்டொன்றுக்கு ஆஸ்திரேலியா அனுமதிக்கும் குடிவரவாளர்களின் எண்ணிக்கை சரியானளவில் உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்று 52 வீதமானவர்கள் தெரிவித்துள்ள அதேநேரம் 43 வீதமானவர்கள் இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக்கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 20 வீதமானவர்கள் தாங்கள் மதத்தாலும் நிறத்தாலும் புறக்கணிப்புக்களுக்கு முகங்கொடுப்பதாக கூறுகிறார்கள்.
48 வீதமானவர்கள் கன்பராவில் உள்ள அரசியல்வாதிகள் சரியான முடிவுகளைத்தான் எடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மறைநிலை பார்வையுடையவர்களாக ஆஸ்திரேலியர்கள் உள்ளர்கள் என்று 23 வீதமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Share
