பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலை விடுமுறைக் காலங்களில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.
ஆனால் சில பெற்றோர் பாடசாலை விடுமுறைக் காலங்களில் விமானப் பயணச்சீட்டு, தங்குமிடம் உட்பட அனைத்திற்கும் அதிகளவு பணம் செலவாகும் என்பதால், பாடசாலை நடைபெறுகின்ற காலத்திலேயே தமது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு புறப்பட்டுவிடுவார்கள்.
ஆனால் Tasmania மாநிலத்தில் கடந்த ஜுலை 10ம் திகதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின்படி, பாடசாலை நடைபெறும் காலங்களில், சுகயீனம் உள்ளிட்ட தகுந்த காரணத்திற்காக மட்டுமே ஒரு மாணவர் விடுமுறையில் செல்ல முடியும்.
இதையடுத்து mid-term-இல் பிள்ளைகளை விடுமுறைக்கு அழைத்துச்சென்றால் தண்டப்பணம் செலுத்த வேண்டுமா, அல்லது சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமா என அம்மாநிலத்திலுள்ள பெற்றோர் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர்.
எனினும் எவ்வித முன்னறிவிப்புமின்றி பிள்ளைகளை நீண்ட விடுமுறையில் அழைத்துச் செல்லும்போதும், வேண்டுமென்றே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதபோதும் சில சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய மாநிலங்களின் நிலைமை எப்படி இருக்கிறது?
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் mid-term-இன் போது பிள்ளைகளை விடுமுறையில் அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்படுகின்ற அதேநேரம், விக்டோரியாவில் உரிய முன்னறிவிப்புடன் பிள்ளைகள் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பள்ளிக்கூட நாட்களில் பெற்றோர் பிள்ளைகளை விடுமுறைக்கு அழைத்துச் செல்வதைத் தடுப்பதற்கு பாடசாலைகளால் எதுவும் செய்யமுடியாத போதும், தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை உள்ள பெற்றோர் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.