பழங்களுக்குள் ஊசியை செருகுவது மற்றும் உணவுப்பொருட்களை சிதைத்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற கொடூரமான நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களுக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டமாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.
ஸ்ரோபெர்ரி, வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் பழங்களுக்குள் ஊசி மற்றும் கூரான பொருட்கள் செருகிக்கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பீதியில் உறைந்துள்ள நிலையில் பிரதமர் இந்த அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
உள்நோக்கத்துடன் உணவுப்பொருட்களை பழுதடையச்செய்பவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு பத்து வருட சிறைத்தண்டனை என்ற நடைமுறையே இவ்வளவு காலமும் வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், இந்த தண்டனையை இறுக்கமாக்குமாறு attorney-general-இடம் பிரதமர் கோரியுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பதினைந்து வருட சிறைத்தண்டனை, சிறுவர்களின் பாலியல் படங்களை வைத்திருத்தல், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல் ஆகிய குற்றங்களுக்கு சமமானதாகும் என்று பிரதமர் Scott Morrison கூறியுள்ளார்.
யாரோ ஒரு விஷமி பழங்களுக்குள் ஊசியை செருகி முழு நாட்டையும் பதற்றத்தில் வைத்திருப்பதையும் குழந்தைகளை பயமுறுத்துவதையும் ஆஸ்திரேலிய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தண்டனைகளை இறுக்கினால்தான் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பழங்களுக்குள் ஊசி செருகப்பட்ட சுமார் 13 சம்பவங்கள் இதுவரை நாடளாவிய ரீதியில் முறையிடப்பட்டுள்ளமையும் பொலீஸார் இந்த சம்பவங்கள் தொடர்பான தீவிர விசாரணைகளில் இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
