சுற்றுலா விஸாவில் பெண்ணொருவரை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்து பணிப்பெண்ணாக வைத்திருந்தார்கள் என்று கூறப்படும் தொங்கனை பூர்வீகமாகக்கொண்ட தம்பதியினருக்கு பிறிஸ்பன் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
கணவருக்கு ஐந்து வருட சிறையும் மனைவிக்கு ஆறு வருட சிறையும் வழங்கியுள்ள நீதிமன்றம், இருவரும் இரண்டு வருட சிறைக்கு பின்னர் பரோலில் வெளியேறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு சுற்றுலா விஸாவில் பீஜியிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த 47 வயதுப்பெண் 2016 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வீட்டுவேலைகளுக்காகவும் பல்வேறு பணிகளுக்காகவும் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார் என்றும் இவருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை 250 டொலர்கள் ஊதியமாக வழங்கப்பட்டிருக்கிறது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய பிரஜை அல்லாத ஒருவரை சட்டவிரோதமாக கொண்டுவந்து தங்களது வீட்டில் வைத்திருந்ததுடன் அவர் கொண்டுவரப்பட்ட காரணத்தையும் அவருக்கான சுதந்திரமான நடமாட்டத்தை மறுத்திருக்கும் குறிப்பிட்ட தம்பதியினர் நிச்சயம் தண்டடிக்கப்படவேண்டும் என்று கடந்த வாரம் ஜூரிகள் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
ஜூரிகளின் கருத்தின் பிரகாரம் தனது தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, தம்பதியரில் ஒருவருக்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்கும் தண்டனை வழங்கினார்.
