ஆஸ்திரேலியர்கள் தமது உணவு, உடை, விமானப்பயணம் உள்ளிட்ட பல விடயங்களில் எவ்வாறு பணத்தைச் சேமிக்கலாம் எனத் திட்டமிடுகின்ற அதேநேரம் வீட்டுக்கடனில் வருடமொன்றுக்கு 7.4 பில்லியன் டொலர்களை வீணாகச் செலவிடுகிறார்கள் என புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
நாட்டு மக்கள் பலரும் வீட்டுக்கடனைத் தவிர ஏனைய அனைத்து அம்சங்களிலும் எப்படிச் செலவைக் குறைக்கலாம், எங்கே சலுகை விலையில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனச் சிந்திப்பதாக குறித்த ஆய்வு கூறுகின்றது. பதிலுக்கு வட்டிவீதம் குறைவாக இருக்கின்ற மற்றொரு வங்கிக்கு தமது வீட்டுக்கடனை மாற்றலாமா என்பது பற்றி பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை என குறிப்பிடப்படுகின்றது.
University of Technology Sydney சுமார் ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வின்படி, இவர்களில் 30 வீதமானவர்கள் தமது வீட்டுக்கடனை வேறொரு வங்கிக்கு மாற்றியிருக்கிறார்கள். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 500-3000 டொலர்கள் வரை பணத்தைச் சேமித்திருக்கிறார்கள்.
இதேவேளை நாட்டிலுள்ள கால்வாசிப்பேர் வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது சிக்கலானது எனக் கருதுவதும், அவ்வாறு மாற்றினாலும் பெரிதாக என்ன சேமிக்கப் போகிறோம் என நினைப்பதுமே, இந்த விடயத்தைப் பற்றி சிந்திக்காமலிருப்பதற்குக் காரணமென குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் வீட்டுக்கடனுக்கு மட்டுமல்லாமல் கடனட்டைக்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்டுள்ள பொருளியல் வல்லுநர்கள் வீட்டுக்கடன் மற்றும் கடனட்டை பேன்றவற்றை எந்த வங்கி மூலம் பெற்றால் அதிக இலாபம் கிடைக்கும் என்பதைத் தேடிப்பார்த்து அதற்கு மாறுவதன் மூலம் கணிசமானளவு பணத்தைச் சேமிக்க முடியுமென தெரிவித்துள்ளனர்.
Share
