ஆஸ்திரேலியாவின் புதிய பணத்தாள் தயாரிப்பில் மாடு மற்றும் ஆட்டு இறைச்சிகளிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பை மூலப்பொருளாக பயன்படுத்தவேண்டாம் என்றும், சுமார் நான்கரை லட்சம் இந்துக்கள் வாழுகின்ற ஆஸ்திரேலியாவில் இந்த விடயத்தை உணர்வுபூர்வமாக அணுகுமாறும் ஆஸ்திரேலிய ரிசேர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக dailymail செய்திவெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் புதிய $5, $10, $50 தாள்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கின்றன. இவ்வருடம் புதிய $20 தாள்களும் அடுத்தவருடம் புதிய $100 தாள்களும் வெளிவரவுள்ளன. இந்த தயாரிப்பில் ஆட்டு - மாட்டு இறைச்சிகளிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பை பயன்படுத்தவேண்டாம் என்று சர்வதேச இந்து மாமன்ற தலைவர் Rajan Zed ஆஸ்திரேலிய வங்கி கவர்னர் Philip Loweவிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison-இடமும் இந்த விடயத்தை எடுத்துச்சொல்லுமாறு கேட்டிருப்பதாக அச்செய்திநல்ல தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தாள் தயாரிப்பில் சிறியளவிலேனும் மூலப்பொருளாக மாடு மற்றும் ஆட்டு கொழுப்பு பயன்படுத்தப்படுவது கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து வங்கி வெளியிட்ட தகவல் ஒன்றின் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.பணத்தாள்களை வழுவழுப்பாக பேணுவதற்கும் வேறு தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் இந்தக்கொழுப்பு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த முறை ஆஸ்திரேலியாவிலும் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. ஆகவே, மாட்டு இறைச்சி மற்றும் மாமிச ஒறுப்பு ஆகிய விடயங்களில் இந்துக்கள் கடும் கட்டுப்பாட்டை பேணுபவர்கள் என்ற காரணத்தினால் இந்த விடயத்தை ஆஸ்திரேலியா உணர்வுபூர்வமாக அணுகவேண்டும் என்றும் ஏனைய மதத்தவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இறைச்சிக்கொழுப்பின் பாவனை முறை குறித்த சர்ச்சை வெடிப்பது இது முதல் தடவை அல்ல என்பதும் Mc Donalds உணவகம் தனது பிரபலமான Fries உணவில் மாட்டு இறைச்சி கொழுப்பு பயன்படுத்துவதாக 2002 இல் அம்பலமானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் கிறீஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக - நான்காவதாக - அதிக மக்கள் பின்பற்றும் மதம் இந்து மதம் என்று 2016 கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
