Centrelink-இடம் பொய் சொல்லி பணம் பெற்றதாக தம்மீது தவறுதலாக குற்றம்சாட்டப்படுகிறதென முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் உட்பட பலர் தெரிவித்துள்ளனர்.
தமது வருமானம் தொடர்பில் Centrelink-இடம் பொய் சொல்லி மோசடியில் ஈடுபட்டதாகவும், எனவே குறிப்பிட்ட தொகை பணத்தை அவர்கள் மீளச் செலுத்த வேண்டுமெனவும் கூறி பல ஆயிரக்கணக்கானோருக்கு Centrelink-இடமிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறாக ஆரம்பத்தில் வருடமொன்றுக்கு 20 ஆயிரம் கடிதங்கள் அனுப்பட்டதாகவும் தற்போது வாரமொன்றுக்கு 20 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Centrelink-ஆல் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட புதிய தானியங்கி சேவையானது, கடந்த சில வருடங்களுக்கான Centrelink தரவுகளையும், தமது வருமானம் தொடர்பில் ஒருவர் வரித்திணைக்களத்திடம் குறிப்பிட்ட தகவல்களையும் ஒப்பிட்டுப்பார்த்து, அதில் ஏற்படும் முரண்பாடுகளை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடிதங்களை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பில் குழப்பமடைந்திருப்பவர்கள் தம்மை hank@humanservices.gov.au என்ற மின்னஞ்சல் மூலம் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என Centrelink சேவைகளுக்குப் பொறுப்பான Hank Jongen தெரிவித்துள்ளார்.
Share
