சிட்னியில் தமிழர்கள் செறிந்து வாழும் பரமட்டா பகுதியிலுள்ள 171 கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள Combustible cladding என்ற உலோகப்பூச்சு, தீவிபத்தொன்று ஏற்படும்பட்சத்தில் அதனை மேலும் அதிகரிக்கவல்லது என்று கட்டடங்களை சோதனையிட்ட Fire and Rescue NSW (FRNSW) அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.
நியூசவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதிலும் மேற்கொண்ட சோதனையில் கிட்டத்தட்ட 629 கட்டடங்கள் இவ்வாறான ஆபத்து நிறைந்தவகையில் அமைக்கப்பட்டுள்ளன என்றும், பரமட்டாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 171 கட்டடங்களில் 125 கட்டடங்கள் பொதுமக்கள் குடியிருப்புக்கள் - 46 கட்டடங்கள் வர்த்தக நிறுவனங்கள் என்றும் குறிப்பிட்ட அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2017 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற தீவிபத்தில் 72 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட Fire and Rescue NSW (FRNSW) நிபுணர்கள் குழு அனைத்து கட்டடங்களினதும் பாதுகாப்பு குறித்த சோதனைகளில் ஈடுபட்டுவருகிறது.
இந்த அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து நியூசவுத் வேல்ஸ் அரசாங்கம் கூறுகையில் - கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள வெளிப்பூச்சு எப்போதுமே தீவிபத்தினை அதிகரிக்கச்செய்வது என்று கூறிவிடமுடியாது. இது கட்டடங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நடைமுறைகளிலும் தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஆனால், கிறீன் கட்சி உறுப்பினர் David Shoebridge கூறும்போது - இதுவிடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் இது உறங்குநிலையில் உள்ள பேராபத்து என்றும் தெரிவித்துள்ளார்.
